எருமேலி-சபரிமலை பாதையில் யானை தாக்கி சேலம் அய்யப்ப பக்தர் சாவு


எருமேலி-சபரிமலை பாதையில் யானை தாக்கி சேலம் அய்யப்ப பக்தர் சாவு
x
தினத்தந்தி 10 Jan 2019 4:50 AM IST (Updated: 10 Jan 2019 4:50 AM IST)
t-max-icont-min-icon

எருமேலியில் இருந்து சபரிமலைக்கு செல்லும் பாதையில் யானை தாக்கியதில் சேலத்தை சேர்ந்த அய்யப்ப பக்தர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

சேலம்,

சேலம் பள்ளப்பட்டி நடுத்தெருவை சேர்ந்தவர் பரமசிவம் (வயது35). இவர் கடந்த 7-ந்தேதி தனது மகன் கோகுலகிருஷ்ணன் (11) உள்பட 14 அய்யப்ப பக்தர்களுடன் சபரிமலைக்கு புறப்பட்டனர். நேற்று அதிகாலை பம்பைக்கு வனப்பகுதி வழியாக அவர்கள் நடந்து சென்று கொண்டிருந்தனர். பரமசிவம் தனது மகனை தோளில் சுமந்து கொண்டு நடந்தார். அப்போது அங்கு வந்த காட்டு யானை ஒன்று இவர்களை தாக்க ஆவேசமாக ஓடி வந்தது.

இதனால் பதறிப்போன அனைவரும் உயிரை காப்பாற்றிக்கொள்ள நாலாபுறமும் சிதறி ஓடினர். பரமசிவம் தோளில் மகனை சுமந்து கொண்டு இருந்ததால் அவரால் வேகமாக ஓட முடியவில்லை. இதனால் யானை அவரை விரட்டி சென்று தாக்கியது. இதில் அவர் நிலைகுலைந்து கீழே விழுந்தார். பின்னர் அந்த யானை பரம சிவத்தை மிதித்துக்கொன்றது. அதே சமயம் பரமசிவத்தின் மகன் கோகுலகிருஷ்ணன் அதிர்ஷ்டவசமாக யானையிடம் இருந்து தப்பினான்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. வன ஊழியர்கள் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கிடையே பரமசிவத்தின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின் அவரது சொந்த ஊரான சேலத்திற்கு அனுப்ப கேரள அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

அதேசமயம், கேரளாவில் யானை தாக்கி பரமசிவம் உயிரிழந்த தகவலை அறிந்தவுடன் சேலத்தில் உள்ள அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். பரமசிவத்திற்கு திருமணம் ஆகி இந்திராணி (26) என்ற மனைவியும், கோகுலகிருஷ்ணன் (11), சஞ்சீவன் (9) ஆகிய 2 மகன்களும், யாழினி (7) என்ற மகளும் உள்ளனர்.

சபரிமலைக்கு சென்றபோது யானை தாக்கி பரமசிவம் பலியான சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story