2-வது நாளாக போராட்டம், சேலத்தில் தொழிற்சங்கத்தினர் சாலை மறியல்


2-வது நாளாக போராட்டம், சேலத்தில் தொழிற்சங்கத்தினர் சாலை மறியல்
x
தினத்தந்தி 10 Jan 2019 5:22 AM IST (Updated: 10 Jan 2019 5:22 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் 2-வது நாளாக நடைபெற்ற போராட்டத்தின் போது தொழிற்சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 1,050 பேர் கைது செய்யப்பட்டனர்.

சேலம், 

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். வேலைவாய்ப்பை அதிகரித்து வேலையில்லா திண்டாடத்தை கைவிட வேண்டும். ரெயில்வே, பாதுகாப்பு துறை, தொழிற்சாலைகள் உள்ளிட்ட துறைகளில் நேரடி அன்னிய முதலீட்டை அனுமதிக்ககூடாது என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய, மாநில அரசு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை நேற்று முன்தினம் தொடங்கினர். இதையொட்டி சேலத்தில் அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள், தொழிற்சங்கத்தினர், ஆட்டோ டிரைவர்கள் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் நேற்று 2-வது நாளாக பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த திரளானவர்கள் சேலம் பழைய பஸ்நிலையம் முன்பு திரண்டனர். இதில் சி.ஐ.டி.யு. நிர்வாகி தியாகராஜன், ஏ.ஐ.டி.யு.சி. நிர்வாகி முனுசாமி, தொ.மு.ச. நிர்வாகி பழனியப்பன், எச்.எம்.எஸ். நிர்வாகி கணேசன், ஐ.என்.டி.யு.சி. நிர்வாகி வடமலை மற்றும் தமிழ்நாடு சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கத்தினர், தமிழ்நாடு கால்டாக்சி மற்றும் ஓட்டுனர்கள் சங்கத்தினர் உள்பட பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் திரளாக கூடினார்கள்.

இதைத்தொடர்ந்து தொழிற்சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக பழைய பஸ்நிலையத்தில் இருந்து பஸ்கள் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து போக்குவரத்து நிறுத்தப்பட்டு பஸ்கள் கோட்டை மாரியம்மன் கோவில் பின்புறம் வழியாக போலீசார் திருப்பி விட்டனர். சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பஸ்கள் செல்ல வேண்டும் எனவும், பயணிகள் யாருக்கும் எந்தவித இடையூறும் ஏற்படுத்தக்கூடாது எனவும் மறியலை கைவிடும்படியும் அவர்கள் கூறினர்.

ஆனால் தொடர்ந்து அவர்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பி கொண்டிருந்தனர். இதனால் போலீசார் அவர்களை கைது செய்ய முயன்றனர். அப்போது அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. போலீசார் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்து டவுன் பகுதியில் இருந்த மண்டபத்திற்கு பஸ்கள், வேன்கள் மற்றும் அரசு பஸ்களில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

இதேபோல் சம்பள உயர்வு கேட்டும், தொழிற்சங்கங்கள் விண்ணப்பித்த 45 நாட்களுக்குள் கட்டாயமாக சங்கத்தை பதிவு செய்ய வேண்டும் என்பன உள்பட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தோட்ட தொழிலாளர்கள் சங்கத்தினர் சேலம் பழைய நாட்டாண்மை கழக கட்டிடம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங் களை எழுப்பினர். பின்னர் அவர்கள் சேலம் பழைய பஸ்நிலைய பகுதியில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து தோட்ட தொழிலாளர்களை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் கோட்டையில் உள்ள மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர். அந்த பகுதியில் பாதுகாப்புக்காக போலீசார் நிறுத்தப்பட்டனர். 2 இடங்களில் மறியலில் ஈடுபட்ட 300-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட தொழிற்சங்கத்தினர், தோட்ட தொழிலாளர்கள் என மொத்தம் 1,050 பேர் கைது செய்யப்பட்டனர்.

மேலும் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் சங்கத்தினர், எல்.ஐ.சி. ஊழியர்கள் ஆகியோர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பணிகள் பாதிக்கப்பட்டன. சேலத்தில் பஸ்கள் மற்றும் ஆட்டோக்கள் வழக்கம் போல் ஓடின. இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படவில்லை.

Next Story