வேலைநிறுத்த போராட்டத்தை தொடர்ந்து புதுச்சேரியில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
வேலைநிறுத்த போராட்டத்தை தொடர்ந்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
புதுச்சேரி,
பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கக்கூடாது, மாத ஊதியமாக ரூ.21 ஆயிரம் வழங்கவேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அளவில் 2 நாள் வேலை நிறுத்த போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதன்படி புதுவையில் நேற்று முன்தினம் முழுஅடைப்பு போராட்டம் நடந்தது.
நேற்று தொழிற்சங்கங்கள் சார்பில் வேலைநிறுத்தம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டது. இருந்தபோதிலும் புதுவையில் உள்ள தொழிற்பேட்டைகள் அனைத்தும் இயங்கின. சில தொழில்நிறுவனங்களில் குறைவான அளவில் ஊழியர்கள் பணிக்கு வந்திருந்தனர். வங்கிகளிலும் பெரும்பலான ஊழியர்கள் பணிக்கு வந்திருந்தனர்.
வேலைநிறுத்த போராட்டத்தின் ஒரு பகுதியாக இந்திராகாந்தி சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு செயலாளர் ராஜாங்கம், இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் சலீம், விடுதலை சிறுத்தைகளின் முதன்மை செயலாளர் தேவபொழிலன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.
ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் விசுவநாதன், ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தை சேர்ந்த அபிசேகம், சேதுசெல்வம், சி.ஐ.டி.யு. பொதுச்செயலாளர் சீனுவாசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தமிழ்மாநிலக்குழு உறுப்பினர் பெருமாள், பிரதேசக்குழு முருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.