சேலம் மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பை இரவிலும் காத்திருந்து பெற்றுச்சென்ற பொதுமக்கள்


சேலம் மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பை இரவிலும் காத்திருந்து பெற்றுச்சென்ற பொதுமக்கள்
x
தினத்தந்தி 10 Jan 2019 5:33 AM IST (Updated: 10 Jan 2019 5:33 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பை இரவிலும் காத்திருந்து பொது மக்கள் பெற்றுச் சென்றனர்.

சேலம், 

பொங்கல் பண்டிகையை பொது மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் விதமாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1,000-ம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதையொட்டி தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

சேலம் மாவட்டத்தில் 1,570 ரேஷன் கடைகள் உள்ளன. இதில் சுமார் 10 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1,000 பெறுவதற்கு பொது மக்கள் தினமும் காலை முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் நீண்ட வரிசையில் காத்திருந்து பெற்றுச்செல்கின்றனர். நேற்று மாலையில் கடைகளில் கூட்டம் குவிந்ததால், சேலம் நகரில் பல்வேறு ரேஷன் கடைகளில் ஊழியர்கள் இரவிலும் மின்விளக்கு வெளிச்சத்தில் பொது மக்களுக்கு பொங்கல் பரிசு வழங்கினர். பல கடைகளில் இரவு 10 மணி வரை பொதுமக்கள் பெற்றுச்சென்றனர்.

ஓமலூரில் சில ரேஷன் கடைகளில் நேற்று இரவு மின் வெளிச்சத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. ஏற்காட்டில் உள்ள பல ரேஷன் கடைகளில் பொது மக்கள் இரவு 10 மணி வரை காத்திருந்து பெற்றுச்சென்றனர்.

எடப்பாடி நகராட்சியில் மொத்தம் 17,582 ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். நேற்று சில கடைகளில் ஊழியர்கள் இரவு நேரம் ஆகிவிட்டதால் நாளை (இன்று) வாருங்கள் என்று கூறினர். இதற்கு பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்து இரவு 10 மணி வரை காத்திருந்து பொங்கல் பரிசு பெற்றுச்சென்றனர்.

கொளத்தூர் வட்டாரத்திற்கு உட்பட்ட கண்ணாமூச்சி, செட்டியூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் நீண்ட வரிசையில் நள்ளிரவு வரை காத்திருந்து பொதுமக்கள் பொங்கல் பரிசு பெற்றுச்சென்றனர்.

இது குறித்து சேலம் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராஜேந்திரபிரசாத்திடம் கேட்ட போது, ’மாவட்டத்தை பொறுத்த வரை அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1,000-ம் வழங்கும் பணி தடையின்றி நடந்து வருகிறது. ஒரு சில கடைகளில் இரவு வரை பொது மக்களுக்கு வழங்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் இது வரை சுமார் 60 சதவீதம் ரேஷன் கார்டு தாரர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது’ என்றார்.


Next Story