காணொலிகாட்சி மூலம் உரையாற்றினார் தமிழ்நாட்டில் யாருடன் பா.ஜ.க. கூட்டணி? தொண்டர்கள் கேள்விக்கு பிரதமர் மோடி பதில்


காணொலிகாட்சி மூலம் உரையாற்றினார் தமிழ்நாட்டில் யாருடன் பா.ஜ.க. கூட்டணி? தொண்டர்கள் கேள்விக்கு பிரதமர் மோடி பதில்
x
தினத்தந்தி 10 Jan 2019 10:45 PM GMT (Updated: 10 Jan 2019 1:47 PM GMT)

பிரதமர் மோடி நேற்று அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியை சேர்ந்த பா.ஜ.க. பூத் கமிட்டி பொறுப்பாளர்களுடன், காணொலி காட்சி மூலம் உரையாற்றினார். அப்போது தமிழ்நாட்டில் யாருடன் பா.ஜ.க. கூட்டணி அமைக்கும் என்ற தொண்டர்களின் கேள்விக்கு அவர் பதிலளித்தார்.

சிப்காட்( ராணிப்பேட்டை), 

வேலூர் மாவட்டம் அரக்கோணம், கடலூர், கிருஷ்ணகிரி, ஈரோடு, தர்மபுரி ஆகிய நாடாளுமன்ற தொகுதியை சேர்ந்த பா.ஜ.க. பூத் கமிட்டி பொறுப்பாளர்களுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் உரையாற்றும் நிகழ்ச்சி நேற்று அந்தந்த நாடாளுமன்ற தொகுதிகளில் நடந்தது. அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி பா.ஜ.க. பூத் கமிட்டி பொறுப்பாளர்களுடன், காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி உரையாற்றும் நிகழ்ச்சி ராணிப்பேட்டை பைபாஸ் சாலையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.

அப்போது அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியை சேர்ந்த பா.ஜ.க. தொண்டர்கள் தமிழ்நாட்டில் பா.ஜ.க. யாருடன் கூட்டணி சேரும் என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பிரதமர் மோடி தற்போது கூட்டணி குறித்து தொண்டர்கள் கவலைப்பட வேண்டாம். பா.ஜ.க. பலமாக உள்ளது. பா.ஜ.க. அரசு தமிழகத்திற்கு செய்துள்ள திட்டங்கள் குறித்து மக்களிடம் எடுத்து கூறுங்கள் என பிரதமர் மோடி காணொலி காட்சியில் பதிலளித்தார். இதே போல் மற்ற நாடாளுமன்ற தொகுதிகளின் பா.ஜ.க. தொண்டர்கள் கேட்ட கேள்விக்கும் பிரதமர் மோடி பதிலளித்தார்.

இதை தொடர்ந்து நிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்த தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது :–

சாதாரண தொண்டர்களின் கேள்விக்குக்கூட பதிலளிக்கும் எளிமையான பிரதமராக மோடி உள்ளார். தமிழ்நாட்டில் மத்திய அரசு மூலம் 47 லட்சம் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 1 கோடியே 90 லட்சம் பேர் முத்ரா திட்டம் மூலம் பயன் பெற்றுள்ளனர். இதில் 1 கோடி பேர் பெண்கள். செல்வமகள் சேமிப்புதிட்டத்தில் அதிகமானவர்கள் தமிழ்நாட்டில் சேர்ந்துள்ளனர்.

2600 கோடி ரூபாய் பயிர் பாதுகாப்பு திட்டத்திற்கு செலவிடப்பட்டுள்ளது. 75ஆயிரம் கோடி ரூபாய் சாலை வசதிகளுக்கு செலவிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு மட்டும் ரூ.5 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டு வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. முன்பு ஆண்ட கட்சிகளை ஒப்பிடும் போது தமிழ்நாட்டிற்கு பா.ஜ.க. அரசு அதிகமான திட்டங்களை தந்துள்ளது. தமிழ்நாட்டில் பிரதமர் மோடியை அதிக அளவில் விமர்சிக்கிறார்கள். அதைப்பற்றி தொண்டர்கள் கவலைப்படாமல், மத்திய பா.ஜ.க. அரசு செய்துள்ள சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்லுங்கள் என்று பிரதமர் மோடி தொண்டர்களுக்கு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் ஊராட்சிசபை கூட்டம் என்று கூறி தி.மு.க.தலைவர் ஸ்டாலின் ஓரங்க நாடகத்தை அரங்கேற்றுகிறார். இப்படித்தான் கேள்விகள் கேட்க வேண்டும் என முன்னரே கூறப்பட்டு, கேள்விகள் கேட்கப்படுகிறது. இந்த கூட்டங்களில் மத்திய அரசை குறைகூறும் ஸ்டாலின் செயலை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இனி நாங்களும் எந்த கட்சியினர் ஊழல் செய்தார்கள் என்பதை மக்களிடம் கொண்டு செல்வோம்.

மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் 8–ம் வகுப்பு வரை படிக்கும் அனைவரும் இந்தியை கட்டாயம் கற்க வேண்டும் என கூறியுள்ளதாக நாடெங்கிலும் வதந்தி பரவியுள்ளது. இது தவறான தகவல். யாரையும் எந்த மொழியையும் கற்றுக்கொள்ள மத்திய அரசு கட்டாயப்படுத்தாது. கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் மோடி வருத்தத்தை தெரிவிக்கவில்லை என பிரசாரம் செய்யப்படுகிறது. இது தவறான தகவல்.

பிரதமர் மோடி புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வருத்தத்தை தெரிவித்ததோடு அல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு மத்திய அரசு மூலம் நிதி ஒதுக்கி வீடுகள் கட்டித்தருவது, மின்சார பணிகளை சீரமைப்பது என்பவை உள்பட பல்வேறுபணிகளை செய்துள்ளார்.

பொருளாதார ரீதியில் பின் தங்கியவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு என்ற மத்திய அரசின் திட்டத்தை பெரும்பாலானவர்கள் வரவேற்றுள்ளனர். இதனால் சமூக நீதிக்கு பாதிப்பு ஏற்படும் என்று தமிழ்நாட்டில் சிலர் கூறுவதை ஏற்றுகொள்வதற்கில்லை. இந்த இட ஒதுக்கீட்டின் மூலம் ஏழைகள் அதிகம் பயன்பெறுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது வேலூர் கிழக்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் தசரதன் உள்பட பா.ஜ.க. நிர்வாகிகள் உடன் இருந்தனர். பிரதமர் மோடி காணொலி காட்சியின் மூலம் உரையாற்றிய நிகழ்ச்சியில் அரக்கோணம் பாராளுமன்ற தொகுதி பா.ஜ.க. நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.


Next Story