தர்மபுரி மாவட்ட பா.ஜனதா நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி காணொலிகாட்சி மூலம் கலந்துரையாடல் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து விளக்கினார்
தர்மபுரி மாவட்ட பா.ஜனதா நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி காணொலிகாட்சி மூலம் நேற்று கலந்துரையாடினார். அப்போது மத்திய அரசின் திட்டங்கள் குறித்து அவர் விளக்கினார்.
தர்மபுரி,
இந்தியா முழுவதும் என் வாக்குச்சாவடி வலுவான வாக்குச்சாவடி என்ற தலைப்பில் பா.ஜனதா நிர்வாகிகள் மற்றும் வாக்குச்சாவடி முகவர்களுடன் பிரதமர் நரேந்திரமோடி காணொலி காட்சி மூலம் கலந்துரையாடி வருகிறார். இதன் ஒரு பகுதியாக நேற்று தர்மபுரி மாவட்ட பா.ஜனதா நிர்வாகிகள் மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் பங்கேற்ற கலந்துரையாடல் கூட்டம் தர்மபுரி பென்னாகரம் சாலையில் உள்ள குமரன் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பா.ஜனதா மாவட்ட தலைவர் வரதராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுசெயலாளர்கள் செல்லபாண்டியன், அழகு, சிவம், மாவட்ட பொருளாளர் கணேசன், முன்னாள் எம்.எல்.ஏ. பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கலந்துரையாடல் கூட்டத்தில் காணொலிகாட்சி மூலம் பிரதமர் மோடி பேசுவதற்காக எல்.இ.டி. திரை அமைக்கப்பட்டிருந்தது. இந்த திரையில் நேற்று மதியம் 1 மணிக்கு தோன்றிய பிரதமர் மோடி கட்சி நிர்வாகிகள் மற்றும் வாக்குச்சாவடி முகவர்களுடன் சுமார் 15 நிமிடங்கள் கலந்துரையாடினார். அப்போது கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினரும், மத்திய அரசு திட்டங்கள் பிரிவு பொறுப்பாளருமான சீனிபரத்வாஜ், மத்திய அரசு தமிழகத்தின் மேம்பாட்டிற்காக செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்தும் பொதுமக்களுக்கு அந்த திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் முறைகள் குறித்தும் கேள்வி எழுப்பினார்.
இந்த கேள்விக்கு பிரதமர் மோடி பதிலளித்து பேசியதாவது:–
முத்ரா வங்கி திட்டத்தின் கீழ் தமிழகத்தில் ஏராளமானோருக்கு கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்ததிட்டத்தில் மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் அதிக அளவில் பயன்பெற்று உள்ளனர். உஜ்வாலா திட்டத்தின் கீழ் தமிழகத்தில் அதிக அளவில் இலவச கியாஸ் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. பிரதமரின் மருத்துவக்காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறும் திட்டத்தை தமிழகத்தில் முனைப்புடன் செயல்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
குறிப்பாக விவசாயிகளுக்கான பயிர்காப்பீட்டு திட்டத்தின் மூலம் தமிழகத்தை சேர்ந்த விவசாயிகள் அதிக அளவில் பயன்பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் தனிநபர் கழிப்பறைகள் கட்டும் திட்டம் தமிழகத்தில் சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு உள்ளது. அனைத்து வீடுகளிலும் தனிநபர் கழிப்பறைகள் அமைக்கும் இலக்கை எட்ட தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசின் வளர்ச்சி திட்டங்கள் தமிழகத்தில் சிறப்பான முறையில் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டங்கள் குறித்து பா.ஜனதாவினர் முழுமையாக அறிந்த கொள்ள வேண்டும். அதன்மூலம் பொதுமக்களுக்கு மத்திய அரசின் மக்கள் நல திட்டங்களை எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தி அனைத்து தரப்பு மக்களையும் திட்டங்களில் பயன்பெற செய்ய வேண்டும்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
இந்த கூட்டத்தில் கோட்ட பொறுப்பாளர் பாலகிருஷ்ணன், வர்த்தகர் அணி மண்டல பொறுப்பாளர் சரவணன், மாவட்டதுணைத்தலைவர் வெங்கட்ராஜ், அமைப்பு செயலாளர் சரவணன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் தர்மபுரி ஒன்றிய தலைவர் வெற்றிவேல் நன்றி கூறினார்.