சேலம் புதிய பஸ்நிலையம் அருகில் மாநகராட்சி இடத்தில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கும் பணி தீவிரம் பொங்கல் பண்டிகையையொட்டி சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு


சேலம் புதிய பஸ்நிலையம் அருகில் மாநகராட்சி இடத்தில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கும் பணி தீவிரம் பொங்கல் பண்டிகையையொட்டி சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு
x
தினத்தந்தி 11 Jan 2019 4:15 AM IST (Updated: 10 Jan 2019 11:00 PM IST)
t-max-icont-min-icon

சேலம் புதிய பஸ் நிலையம் அருகில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அங்கிருந்து பொங்கல் பண்டிகையையொட்டி சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சேலம், 

சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து நாமக்கல், மதுரை, கோவை, திருப்பூர், திருச்சி, சென்னை, திருநெல்வேலி, பெங்களூரு, திருவண்ணாமலை, கடலூர், வேலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் பஸ் நிலையத்தில் எப்போது பார்த்தாலும் பயணிகளின் கூட்டம் அதிகமாக இருக்கும். அதேசமயம், தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகை காலங்களில் பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கவும், வெளியூர்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவதாலும் 3 ரோடு அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான ஜவகர் மில் திடலில் இருந்து பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன.

ஆனால் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, புதிய பஸ்நிலையம் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான காலி இடத்தில் தற்காலிகமாக பஸ் நிலையம் அமைத்து, அங்கிருந்து சிறப்பு பஸ்கள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக அந்த பகுதியில் இருக்கும் சுமார் 4½ ஏக்கர் கொண்ட காலி இடத்தில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதற்காக முள்செடிகள், மண் மற்றும் குப்பை கழிவுகளை அப்புறப்படுத்தும் பணிகள் பொக்லைன் எந்திரம் மூலம் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இனிமேல் பொங்கல் மற்றும் தீபாவளி பண்டிகை காலங்களில் ஜவகர் மில் திடலில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படாது என்றும், அதற்கு மாற்றாக புதிய பஸ்நிலையத்திற்கு அருகில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் இருந்து தான் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், சேலம் புதிய பஸ்நிலையமானது 5 ஏக்கரில் அமைந்துள்ளது. இதன் அருகே இருக்கும் 4½ ஏக்கர் காலி நிலம் தனியாருக்கு சொந்தம் என்று சம்பந்தப்பட்ட ஒருவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதை எதிர்த்து மாநகராட்சி சார்பிலும் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் 36 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் தற்போது புதிய பஸ்நிலையம் அருகில் உள்ள 4½ ஏக்கர் நிலம் மாநகராட்சிக்கு சொந்தமானது என்று சாதகமான தீர்ப்பு வெளியானது.

இதனால் அந்த இடத்தை தூய்மைப்படுத்தி கழிப்பிடம், குடிநீர், மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இன்னும் ஓரிரு நாட்களில் பணிகள் முடிவடைந்தவுடன் அங்கிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படும், என்றனர்.

Next Story