கோவையில் ரூ.98 லட்சம் நகை கொள்ளை, தேடப்பட்ட 2 பேர் சென்னை கோர்ட்டில் சரண்


கோவையில் ரூ.98 லட்சம் நகை கொள்ளை, தேடப்பட்ட 2 பேர் சென்னை கோர்ட்டில் சரண்
x
தினத்தந்தி 10 Jan 2019 10:30 PM GMT (Updated: 10 Jan 2019 5:30 PM GMT)

கோவையில் ரூ.98 லட்சம் நகை கொள்ளை வழக்கில் தேடப்பட்ட 2 பேர் சென்னை கோர்ட்டில் சரண் அடைந்தனர். இந்த கொள்ளையில் தொடர்புடைய மேலும் 6 பேரை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

கோவை,

திருச்சூரில் உள்ள கல்யாண் ஜுவல்லர்ஸ் நகைக்கடையில் இருந்து கோவை 100 அடி ரோட்டில் உள்ள கல்யாண் ஜுவல்லர்ஸ் நகைக்கடைக்கு காரில் கொண்டு வந்த ரூ.98 லட்சம் மதிப்புள்ள தங்கம், வெள்ளி நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. கடந்த 7-ந்தேதி கோவை நவக்கரை அருகே 2 கார்களில் வந்த கொள்ளை கும்பல் நகைக்கடை ஊழியர்கள் 2 பேரை மிரட்டி காரில் இருந்து இறக்கி விட்டுவிட்டு காருடன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.

இது குறித்து கே.ஜி.சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கொள்ளையர்களை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் உத்தரவின் பேரில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில் நகைக்கடை ஊழியர்கள் வந்த கார் மதுக்கரை தென்றல்நகர் பகுதியிலும், கொள்ளையர்கள் தப்பிச் சென்ற 2 கார்களில் ஒரு கார் வழுக்குப்பாறை பகுதியிலும் நிறுத்தப்பட்டு இருந்தது. அவற்றை போலீசார் மீட்டனர்.

கொள்ளையர்கள் பயன்படுத்திய கார் எண் மூலம் நடத்தப்பட்ட விசாரணையில் அதன் உரிமையாளர் சென்னையை சேர்ந்தவர் என்பதும், அவர் காரை கோவையை சேர்ந்த ஒருவருக்கு விற்றதும் கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து நடந்த விசாரணையில் இந்த கொள்ளையில் மூளையாக செயல்பட்டவர்களை பற்றிய விவரங்கள் போலீசாருக்கு கிடைத்தது. எனவே அவர்களின் நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் என 20-க்கும் மேற்பட்டோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்தநிலையில் இந்த கொள்ளையில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்பட்ட சென்னையை சேர்ந்த ஜெயப்பிரகாஷ், தமிழ்செல்வன் ஆகிய 2 பேர் சென்னை ஜார்ஜ்டவுன் கோர்ட்டில் சரண் அடைந்தனர். உடனே அவர்கள் 2 பேரையும் புழல் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

எனவே அவர்கள் 2 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க தனிப்படையினர் சென்னையில் முகாமிட்டுள்ளனர். இந்த கொள்ளையில் தொடர்புடைய மேலும் 6 பேரை பிடிக்க சென்னை, கேரளா, கோவை ஆகிய இடங்களில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள்.

இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறும்போது, கொள்ளையர்கள் தொடர்பான முழு விவரங்களும் தெரியவந்துள்ளது. கோர்ட்டில் சரண் அடைந்த 2 பேரை காவலில் எடுத்து விசாரிக்கும் போது கொள்ளை குறித்து முழு விவரமும் தெரிய வரும். கொள்ளை போன நகைகளை மீட்கவும், அனைத்து கொள்ளையர்களை கைது செய்யவும் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

Next Story