ஊட்டி சேரிங்கிராசில் போக்குவரத்து விதிமுறைகள் குறித்த மின்னணு தகவல் பலகை
வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த போக்குவரத்து விதிமுறைகள் குறித்த மின்னணு தகவல் பலகை ஊட்டி சேரிங்கிராசில் அமைக்கப்பட்டு உள்ளது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் சாலை விபத்துகளை தவிர்க்கவும், சாலை பாதுகாப்பை வலியுறுத்தியும் போலீஸ் சூப்பிரண்டு சண்முகப்பிரியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அவரது சொந்த முயற்சியால் குன்னூர் அருகே காட்டேரி சந்திப்பில் சோலார் மூலம் இயங்கும் ஒளிரும் விளக்குகள் சாலையோரம் பொருத்தப்பட்டு உள்ளது.
அதனை தொடர்ந்து மேட்டுப்பாளையம், கோத்தகிரி மற்றும் குன்னூர் வழியாக ஊட்டிக்கு வரும் அனைத்து வாகன ஓட்டிகள், சுற்றுலா வாகன ஓட்டிகளுக்கும் போக்குவரத்து விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மின்னணு தகவல் பலகை ஊட்டி சேரிங்கிராஸ் சந்திப்பில் பொருத்தப்பட்டு உள்ளது. செல்போனில் சிம் கார்டு போடுவது போல், மின்னணு தகவல் பலகையில் சிம் கார்டு பொருத்தப்பட்டு இருக்கும். அதன் இணைப்பு நீலகிரி போலீஸ் சூப்பிரண்டு சண்முகப்பிரியாவின் செல்போனோடு இணைக்கப்பட்டு உள்ளது.
சீட் பெல்ட் அணிய வேண்டும், இருசக்கர வாகன ஓட்டுனர்கள் மற்றும் பின்னால் அமர்ந்து இருப்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும், மிதமான வேகத்தில் செல்ல வேண்டும், வளைவுகளில் வாகனங்களை முந்தி செல்லக்கூடாது உள்ளிட்ட போக்குவரத்து விதிமுறைகள் குறித்த தகவல்கள் போலீஸ் சூப்பிரண்டு செல்போனில் இருந்து மின்னணு தகவல் பலகை சிம்கார்டுக்கு அனுப்பப்படும்.
அந்த சிக்னலை ஏற்றுக்கொண்டு, சாலை பாதுகாப்பு தகவல்கள் பலகையில் தெரியும். போலீஸ் சூப்பிரண்டு எந்த இடத்தில் இருந்து வேண்டுமானாலும் தகவல்களை அனுப்பும் வசதி உள்ளது. உள்ளூர் மற்றும் வெளியூர் வாகன ஓட்டிகள் சேரிங்கிராஸ் போக்குவரத்து சிக்னலில் வாகனங்களை நிறுத்தி சில நொடிகள் நிற்பார்கள். அவர்கள் சிக்னல் லைட்டுகளை கவனிக்கும் போது, அந்த மின்னணு தகவல் பலகையில் போக்குவரத்து விதிமுறைகளை தெரிந்துகொள்ளும் வகையிலும், அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் அமைக்கப்பட்டு உள்ளது.
அதேபோல் மற்ற சிக்னல்களில் மின்னணு பலகை பொருத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story