மாவட்ட செய்திகள்

அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பெண் சாவு டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டம் + "||" + The struggle to take action against female death doctors who are admitted to the government hospital

அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பெண் சாவு டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டம்

அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பெண் சாவு டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டம்
கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழந்தார். இதனால், டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கும்பகோணம்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள நந்திவனம் பகுதி கீழத்தெருவை சேர்ந்தவர் தமிழரசன். விவசாய கூலி தொழிலாளி. இவருடைய மனைவி தனலெட்சுமி(வயது 29). இவர்களுக்கு ஸ்ரீநிதி(5) என்ற மகளும், மிதூன்(3) என்ற மகனும் உள்ளனர்.


இந்த நிலையில் கடந்த 8-ந்தேதி தனலெட்சுமி குடும்பக்கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு தலைமை மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.

நேற்று காலை தனலெட்சுமிக்கு அறுவை சிகிச்சை செய்வதற்காக அறுவை சிகிச்சை மையத்திற்கு அழைத்து சென்றனர். சிறிது நேரத்திற்கு பின்னர் வெளியே வந்த மருத்துவமனை ஊழியர்கள் தனலெட்சுமி மூச்சுத்திணறி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து தனலெட்சுமியின் கணவர் தமிழரசன் கூறியதாவது:-

குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்காக அழைத்து செல்லும் வரையில் நல்ல நிலையில் தனலெட்சமி பேசிக்கொண்டிருந்தார். அறுவை சிகிச்சை மையத்திற்கு அவரே நடந்து சென்றார். அறுவை சிகிச்சை நல்லபடியாக முடியும் என்று எதிர்பார்த்து கொண்டிருந்தபோது சிறிது நேரத்தில் என்னை தனியாக அழைத்து அமர வைத்தனர். பின்னர் அறுவை சிகிச்சை நடைபெறுவதற்கு முன்னதாகவே தனலெட்சுமி மூச்சுத்திணறி இறந்து விட்டதாக கூறினர்.

மேலும் என்னிடம் காகிதத்தில் கையெழுத்தும் வாங்கிக்கொண்டனர். பின்னர் உடனடியாக தனலெட்சுமியின் உடலை கொண்டு செல்லுமாறு கூறி ஆம்புலன்சில் ஏற்றி அனுப்பி விட்டனர். ஊரில் இருந்த எனது உறவினர்கள் டாக்டரின் தவறான சிகிச்சையால் தனலெட்சுமி இறந்தாரா? எப்படி இறந்தார்? என தெரிய வேண்டும் என கூறியதால் மீண்டும் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு உடலை பிரேத பரிசோதனை செய்வதற்காக கொண்டு வந்துள்ளோம் என்றார்.

இந்த நிலையில் தனலெட்சுமி உயிரிழந்ததற்கான உண்மையான காரணம் தெரிய வேண்டும், தனலெட்சுமிக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தனலெட்சுமியின் உடலை பிரேத பரிசோதனை செய்வதை வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை முன்பு நேற்று மதியம் உறவினர்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், மக்கள் ஜனநாயக குடியரசு கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

ஆசிரியரின் தேர்வுகள்...