செட்டிபுண்ணியம் கிராமத்தில் ரேஷன் கடை பூட்டை உடைத்து பொங்கல் பரிசு பொருட்கள் திருட்டு


செட்டிபுண்ணியம் கிராமத்தில் ரேஷன் கடை பூட்டை உடைத்து பொங்கல் பரிசு பொருட்கள் திருட்டு
x
தினத்தந்தி 10 Jan 2019 10:45 PM GMT (Updated: 10 Jan 2019 7:03 PM GMT)

செட்டிபுண்ணியம் கிராமத்தில் ரேஷன் கடை பூட்டை உடைத்து பொங்கல் பரிசு பொருட்கள் திருடப்பட்டது.

வண்டலூர்,

தமிழகம் முழுவதும் அனைத்து ரேஷன்கார்டுதாரர்களுக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 2 அடி நீள கரும்பு துண்டுகள், தலா 20 கிராம் முந்திரி, திராட்சை மற்றும் 5 கிராம் ஏலக்காய் அடங்கிய பொங்கல் பரிசுத்தொகுப்பு மற்றும் ரூ.1,000 வழங்கப்படும் என்று தமிழக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். தமிழகம் முமுவதும் உள்ள ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் பணி நடந்து வருகிறது.

இந்தநிலையில் சிங்கபெருமாள்கோவிலை அடுத்த செட்டிபுண்ணியம் கிராமத்தில் உள்ள ஒரு ரேஷன் கடையில் 741 கார்டுதாரர்கள் உள்ளனர். இந்த கடை வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே திறக்கப்படும். ரேஷன்கடைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் பணியை நேற்றுமுன்தினம் காலை ரேஷன் கடை ஊழியர்கள் தொடங்கினார். பின்னர் மாலை வரை சுமார் 500 பேருக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு மற்றும் தலா ரூ.1,000 வழங்கிவிட்டு மீதி உள்ளவர்களுக்கு நேற்று வழங்கப்படும் என்று தெரிவித்தனர்.

நேற்று காலை பொங்கல் பரிசுத்தொகுப்புகளை வாங்காத பொதுமக்கள் பொங்கல் பரிசுத்தொகுப்பை வாங்குவதற்கு ரேஷன் கடைக்கு சென்றபோது அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ரேஷன் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கடையில் இருந்த பொங்கல் பரிசுத் தொகுப்பில் அடங்கிய பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன. இது குறித்து ரேஷன் கடை ஊழியருக்கும், மறைமலைநகர் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. ரேஷன் கடை ஊழியர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்த போது முந்திரி, திரட்சை, கரும்பு துண்டுகள் அடங்கிய பொங்கல் பரிசுத்தொகுப்பு பொருட்களை மர்மநபர்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு மறைமலைநகர் போலீசார் நேரில் சென்று அக்கம்பக்கத்தில் உள்ள பொதுமக்களிடம் விசாரணை நடத்தினர். இது குறித்து ரேஷன் கடை ஊழியர் மறைமலைநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்தநிலையில் பொங்கல் பரிசுத்தொகுப்புகளை வாங்காத 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்களுக்கு எப்போது பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படும் என்பது தெரியாமலும், நேற்று ரேஷன் கடை முன்பு கூடியிருந்தனர். அப்போது அங்கு இருந்த பொதுமக்கள் பொங்கல் பரிசுத்தொகுப்பு கிடைக்குமா? கிடைக்காதா? என்று ஏக்கத்திலும் தவித்து கொண்டிருந்தனர்.

இது குறித்து உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
செட்டிபுண்ணியம் ரேஷன் கடையில் நேற்றுமுன்தினம் 500 பேருக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு மற்றும் ரூ.1000 வழங்கிவிட்டு மீதி 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு நேற்று வழங்கலாம் என்று ஊழியர்கள் ரேஷன் கடையை பூட்டிக்கொண்டு வீட்டுக்கு சென்றனர். ரேஷன் கடையில் உள்ள பயனாளிகளுக்கு வழங்க வேண்டிய பொங்கல் பரிசு பணம் இருக்கும் என்ற நோக்கத்தில் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். இரும்பு லாக்கரை உடைத்து பார்த்த போது அதில் பணம் இல்லாததால் ஏமாற்றம் அடைந்த கொள்ளையர்கள் கடையில் வைக்கப்பட்டு இருந்த பொங்கல் பரிசுத்தொகுப்பு பொருட்களான முந்திரி, திரட்சை, கரும்புத்துண்டுகள் போன்றவற்றை திருடிச் சென்றுள்ளனர் ஊழியர்கள் மீதி பணத்தை வீட்டுக்கு கொண்டு சென்றதால் பணம் கொள்ளை போகாமல் தப்பியது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story