தேனி அருகே, ரேஷன் கடையில் பொங்கல் பரிசு வழங்காததால் மறியல் செய்ய முயற்சி
தேனி அருகே ரேஷன் கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்காததால் பொதுமக்கள் சாலை மறியல் செய்ய முயன்றனர்.
தேனி,
தமிழக அரசு சார்பில், ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் வறுமைக் கோட்டுக்கு மேல் உள்ளவர்களுக்கு ரூ.1,000 வழங்க ஐகோர்ட்டு தடை விதித்தது. வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டும் பரிசு தொகுப்புடன் ரூ.1,000 வழங்க வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டது.
இதுகுறித்து அரசு தரப்பில் நேற்று முன்தினம் எந்த உத்தரவும் ரேஷன் கடைகளுக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், நேற்று முன்தினம் மாலையில் ரேஷன் கடையில் மக்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தது.
தேனி நகரில் உள்ள கடைகளில் மாலையில் அதிக மக்கள் வந்ததால், ரேஷன் கடை பணியாளர்கள் தங்களிடம் கையிருப்பில் உள்ள பணத்தை கணக்கிட்டு, கூட்டத்தில் வந்த மக்களுக்கு டோக்கன் வழங்கினர். டோக்கன் அடிப்படையில் ரூ.1,000 பணத்தை வழங்கினர். நேற்றும் ரேஷன் கடைகளில் கூட்டம் அலைமோதியது. கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த ரேஷன் கடைகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே தேனி அருகே மாரியம்மன்கோவில்பட்டி கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் நேற்று பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1,000 வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், தங்களுக்கு ரூ.1,000-த்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க வலியுறுத்தி சாலை மறியல் செய்ய முயன்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த பழனிசெட்டிபட்டி போலீசார் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் மறியல் செய்ய முயன்ற மக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பரிசு பொருட்கள் கிடைக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் மறியல் முயற்சியை கைவிட்டனர்.
பணம் வழங்காதது குறித்து போலீசார் விசாரணை நடத்தியபோது, முந்தைய நாளில் வைத்திருந்த பணம் தீர்ந்துவிட்டதாகவும், பணம் எடுக்க பணியாளர் ஒருவர் கூட்டுறவு வங்கிக்கு சென்று இருப்பதாகவும் தகவல் கிடைத்தது. இதையடுத்து பணம் எடுத்து வரப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் மக்களுக்கு வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story