ரோட்டை கடக்க முயன்ற போது பஸ் மோதி லாரி டிரைவர் சாவு சேலம் கலெக்டர் அலுவலகம் முற்றுகையால் பரபரப்பு
தொப்பூர் அருகே ரோட்டை கடக்க முயன்ற போது பஸ் மோதி லாரி டிரைவர் பரிதாபமாக இறந்தார். விபத்தை ஏற்படுத்தியவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சேலம் கலெக்டர் அலுவலகத்தை உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நல்லம்பள்ளி,
சேலம் மாவட்டம் கருப்பூர் அருகே உள்ள பரவக்காடு பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பக்தர்கள் திருப்பதிக்கு ஒரு தனியார் பஸ்சில் சென்றனர். இவர்கள் அனைவரும் சாமி தரிசனம் செய்து விட்டு மீண்டும் ஊருக்கு புறப்பட்டனர். இந்த பஸ் தர்மபுரி மாவட்டம் தொப்பூர் அருகே உள்ள தொம்பரகாம்பட்டி பகுதியில் நேற்று முன்தினம் வந்த போது பக்தர்கள் ஓட்டலில் சாப்பிட பஸ்சை நிறுத்தினர்.
பின்னர் அனைவரும் பஸ்சில் இருந்து இறங்கி கடையில் சாப்பிட்டு விட்டு மீண்டும் பஸ்சுக்கு வந்தனர். அப்போது பரவக்காட்டை சேர்ந்த லாரி டிரைவர் ராஜூ (வயது 55) என்பவர் ரோட்டை கடக்க முயன்றார். அந்த நேரம் அந்த வழியாக வந்த சொகுசு பஸ் அவர் மீது மோதியது. இந்த விபத்தில் ராஜூ படுகாயம் அடைந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த உடன் வந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று ராஜூ பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே நேற்று ராஜூ குடும்பத்தினர், உறவினர்கள் அவருடைய உடலை வாங்க மறுத்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டும், சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். சிலர் போலீசாரை மீறி கலெக்டர் அலுவலகத்திற்குள் சென்று விட்டனர். இதனால் போலீஸ் அதிகாரி ஒருவர், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை தகாத வார்த்தையால் திட்டினார். அனைவர் முன்பும் திட்டியதால் அந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மனவேதனை அடைந்தார்.
இதைத்தொடர்ந்து போராட்டக்காரர்கள் போலீசாரிடம் கூறியதாவது:-
தொப்பூர் அருகே சொகுசு பஸ் மோதி லாரி டிரைவர் ராஜூ இறந்தார். இதையடுத்து நாங்கள் தொப்பூர் போலீஸ் அதிகாரி ஒருவரிடம் விபத்தை ஏற்படுத்திய பஸ் டிரைவரை கைது செய்ய வேண்டும் என்றோம். எங்களிடம் போலீசார் விபத்தை ஏற்படுத்திய பஸ்சை பிடித்து விட்டதாகவும், 2 டிரைவர்களை பிடித்து விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்தனர். ஆனால் சம்பந்தப்பட்ட பஸ்சின் உரிமையாளரிடம் போலீஸ் அதிகாரி பணத்தை பெற்றுக்கொண்டு, பஸ்சையும், டிரைவர்களையும் விட்டு விட்டார்.
இது தொடர்பாக நாங்கள் அவரிடம் கேட்ட போது தவறான தகவல்களை தெரிவித்து வருகிறார். இந்த விபத்தில் தொடர்புடையவர்களை கைது செய்ய 30 நாட்களுக்குள் மேல் ஆகும் என அலட்சியமாக அவர் கூறினார். எனவே விபத்து ஏற்படுத்திய டிரைவர் மீதும், பணத்தை பெற்றுக்கொண்ட போலீஸ் அதிகாரி மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். இதில் சமாதானம் அடைந்த அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். பின்னர் அவர்கள், கலெக்டரிடம் மனு கொடுத்துவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து கலெக்டர் ரோகிணியின் அறிவுறுத்தலின் பேரில் ராஜூ உடலை அவர்கள் வாங்கி சென்றனர்.
Related Tags :
Next Story