ஐகோர்ட்டு தடை உத்தரவு எதிரொலி, பொங்கல் பரிசு ரூ.1000 வாங்குவதற்கு ரேஷன்கடைகளில் குவிந்த மக்கள்
ஐகோர்ட்டு விதித்த தடையால் பொங்கல் பரிசு ரூ.1,000 வாங்க ரேஷன்கடைகளில் மக்கள் குவிந்தனர். மாலை வரை காத்திருந்தும் கிடைக்காமல் திரும்பி சென்றனர்.
திண்டுக்கல்,
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அனைத்து குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசு பொருட்கள் மற்றும் ரூ.1,000 வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது. இதையடுத்து கடந்த 7-ந்தேதி முதல் பொங்கல் பொருட்களும், ரூ.1,000-ம் வழங்கப்பட்டு வருகிறது. இதனை வாங்குவதற்கு ரேஷன்கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
இதற்கிடையே வறுமை கோட்டுக்கு மேல் இருப்பவர்களுக்கு பொங்கல் பரிசு தொகை வழங்குவதற்கு, சென்னை ஐகோர்ட்டு தடை விதித்தது. அதன்படி சர்க்கரை கார்டு, என் கார்டு ஆகியவற்றுக்கு ரூ.1,000 வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனினும், நேற்று முன்தினம் அனைத்து ரேஷன்கார்டுகளுக்கும் வழங்கப்பட்டது.
அந்த வகையில் நேற்றும் சர்க்கரை கார்டு, என் கார்டு உள்பட அனைத்து விதமான ரேஷன்கார்டு வைத்து இருந்தவர்களும் ரேஷன்கடைகளில் குவிந்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்றும் அனைத்து ரேஷன்கடைகளிலும் காலை 7 மணிக்கே மக்கள் குவிந்தனர். இதற்கிடையே காலை 11 மணிக்கு சர்க்கரை கார்டு, என் கார்டுக்கு பொங்கல் பரிசு தொகை வழங்கக் கூடாது என்று ரேஷன்கடை விற்பனையாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து அந்த இருவகை கார்டு வைத்திருந்தவர்களுக்கு ரூ.1,000 கிடையாது என்று விற்பனையாளர்கள் தெரிவித்தனர். இதற்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சில பகுதிகளில் விற்பனையாளருக்கும், மக்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்த பிரச்சினையை ஒருசில கடைகளில் விற்பனையாளர்கள் சாமர்த்தியமாக கையாண்டனர். சர்க்கரை கார்டு, என் கார்டுகளுக்கு சனி, ஞாயிற்றுக்கிழமை வழங்கப்படும் என்று பேசி அனுப்பி வைத்தனர்.
மேலும் கோர்ட்டு உத்தரவு எதிரொலியாக மதியம் வரை மக்கள் ரேஷன்கடைகளுக்கு வந்த வண்ணம் இருந்தனர். முழுநேர ரேஷன்கடைகளில் 300 முதல் 350 கார்டுகளுக்கு மட்டுமே பொங்கல் பொருட் கள், ரூ.1000 வழங்கப்படும் என்று தகவல் பலகையில் எழுதி இருந்தனர். ஆனால், பல கடைகளில் 500-க்கும் மேற்பட்டோர் வரிசையில் காத்திருந்து, மாலையில் பொங்கல் பரிசு பொருட்கள் கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்தனர்.
திண்டுக்கல் பாரதிபுரத்தில் ஒரு ரேஷன்கடையில் மாலை 5 மணிக்கு 100-க்கும் மேற்பட்ட மக்கள் காத்திருந்தனர். ஆனால், அன்றைய ஒதுக்கீடு தொகை முடிந்து விட்டதால், அடுத்த நாள் வரும்படி விற்பனையாளர் கூறினார். ஆனால், பொதுமக்கள் டோக்கன் தரும்படி கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி அங்கிருந்த பெண்கள் கூறுகையில், பாரதிபுரத்தில் பெரும்பாலானவர்கள் கைத்தறி நெசவுக்கு செல்கிறோம். கடந்த 2 நாட்களாக காலை 9 மணிக்கு வந்தும், பொங்கல் பொருட்கள் கிடைக்காமல் திரும்பி செல்கிறோம். 2 நாட்கள் வேலைக்கும் செல்லவில்லை. பணம் தீர்ந்ததும் டோக்கன் கொடுத்தால் மறுநாள் வாங்குவதற்கு வசதியாக இருக்கும், என்று ஆதங்கப்பட்டனர்.
கொடைக்கானலில் அதிகாலை முதலே கடும் குளிரிலும் ரேஷன் கடைகள் முன்பாக பொதுமக்கள் காத்துக்கிடந்தனர். இந்நிலையில் நகரில் உள்ள சில கடைகள் தாமதமாக திறக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்தனர். அண்ணாநகர் பகுதியில் உள்ள ரேஷன் கடை காலை 11 மணி வரை திறக்கப்படாமல் இருந்தது. இது குறித்து தாசில்தார் குளிவேலிடம் கேட்டபோது, முந்தையநாள் ரேஷன் கடைகளை அடைக்க தாமதம் ஆனதின் காரணமாக இன்று(நேற்று) காலையில் சிறிதுநேரம் கழித்து திறக்கப்பட்டது. கொடைக்கானல் பகுதியில் மொத்தம் 31 ஆயிரத்து 662 ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்க வேண்டிய நிலையில் நேற்று மாலை வரை 17 ஆயிரத்து 795 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
Related Tags :
Next Story