மாவட்ட செய்திகள்

மீண்டும் தலைதூக்கும் பிளாஸ்டிக் பயன்பாடு:மக்கள் ஆதரவு இருந்தாலும் கண்டுகொள்ளாத வியாபாரிகள் + "||" + Re-emergence Plastic use

மீண்டும் தலைதூக்கும் பிளாஸ்டிக் பயன்பாடு:மக்கள் ஆதரவு இருந்தாலும் கண்டுகொள்ளாத வியாபாரிகள்

மீண்டும் தலைதூக்கும் பிளாஸ்டிக் பயன்பாடு:மக்கள் ஆதரவு இருந்தாலும் கண்டுகொள்ளாத வியாபாரிகள்
பிளாஸ்டிக் தடைக்கு மக்கள் ஆதரவு இருந்தாலும், வியாபாரிகள் அதை கண்டுகொள்ளாததால் அதன் பயன்பாடு அதிகரிக்க தொடங்கியிருக்கிறது. எனவே தண்டனையை கடுமையாக்க அரசுக்கு கோரிக்கை எழுந்துள்ளது.
சென்னை,

பிளாஸ்டிக் பைகள் உள்பட 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு கடந்த 1-ந் தேதி முதல் தமிழக அரசு தடை விதித்தது. இதன்மூலம் மக்களின் அன்றாட தேவைகளில் அத்தியாவசிய பொருளாக அமைந்துவிட்ட பிளாஸ்டிக் பைகளுக்கு, பிரியாவிடை கொடுக்கும் நேரமும் தொடங்கியது. அரசின் உத்தரவை தொடர்ந்து மாநகராட்சி, நகராட்சி உள்பட உள்ளாட்சித்துறை அதிகாரிகளிடம் பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கைகள் ஒப்படைக்கப்பட்டன.

வீதி வீதியாக அதிகாரிகள் தங்களது அதிரடி சோதனைகளை அரங்கேற்ற தொடங்கினர். இதனால் பிளாஸ்டிக் இல்லா மாநிலமாக தமிழகம் மாற தொடங்கியது.

அதிகாரிகளின் சோதனைக்கும், அபராதம் உள்ளிட்ட தண்டனைகளுக்கும் பயந்து கடைக்காரர்கள் பிளாஸ்டிக் பைகளுக்கு விடை கொடுக்க தொடங்கினர். இதையடுத்து பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக வாழை இலை, மந்தார இலை, தாமரை இலைகள் பயன்படுத்தப்பட்டன. மளிகை கடைகளிலும் பொட்டலம் மடிக்கும் பழக்கம் திரும்பியது. கடைக்கு செல்லும் மக்களும் மஞ்சப்பை உள்பட துணிப்பைகளை எடுத்துச்செல்ல ஆரம்பித்தனர். இதனால் பிளாஸ்டிக் பைகளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக மூடுவிழா நடத்தப்பட்டு வந்தது.

மீண்டும்...

ஆனால் ‘அரசின் அறிவிப்புகளை அதிகாரிகள் ஆர்வமாக நடைமுறைப்படுத்துவது சில நாட்கள் தான்’, என்ற வகையிலே பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கைகளும் அமைந்துவிட்டது. இதனால் மீண்டும் பிளாஸ்டிக் பைகளை கொஞ்சம் கொஞ்சமாக பெரும்பாலான வியாபாரிகள் பயன்படுத்த தொடங்கியிருக்கின்றனர்.

குறிப்பாக சென்னை பிராட்வே பஸ் நிலையத்தில் திரும்பிய திசையெங்கும் பிளாஸ்டிக் பைகள் தான் தெரிகின்றன. வீதி வீதியாக செல்லும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு, இந்த பகுதி மட்டும் எப்படி கண்ணில் படவில்லை என்பது வியப்பாகவே இருக்கிறது. பூக்கடை, டீக்கடை, குளிர்பான கடை, நடைபாதை காய்கறி-பழக்கடை என அனைத்தும் பிளாஸ்டிக் மயம் தான். உணவகங்களிலும் பிளாஸ்டிக் பேப்பரிலேயே சுடச்சுட உணவு வழங்கப்படுவது தான் முக்கியமான அம்சம். சாம்பார்-சட்னி உள்ளிட்டவையும் பிளாஸ்டிக் பைகளிலேயே கட்டப்படுகிறது.

அதிகாரிகளின் மெத்தன போக்கு

இதுகுறித்து அங்கு வரும் பொதுமக்கள் யாராவது கேள்வி கேட்டால், ‘அப்போ வாங்கி வச்ச சரக்கெல்லாம் குப்பையிலயா போடமுடியும்? வேணும்னா சாப்பிடு, இல்லைனா போயிட்டே இரு’, என்று கடைக்காரர்கள் மிரட்டல் தொனியில் பேசுகிறார்கள். இதனால் மக்களும் ‘நமக்கெதுக்கு வம்பு’ என்ற பாணியில் அமைதியாகி விடுகிறார்கள். டிப்-டாப் ஆக யாராவது சென்று கேட்டால், ‘சார், பிளாஸ்டிக்கு பதிலா சில்வர் கவர் பயன்படுத்தலாம் சார், எல்லாம் முழுசா மாறுவதற்கு ஒரு மாசம் ஆகும் சார்’, என்று அமைதியாக சொல்லிவிடுகிறார்கள்.

இதனால் கடந்த ஒரு வார காலமாக மெல்ல மெல்ல அழிக்கப்பட்டு வந்த பிளாஸ்டிக் பொருட்கள், மீண்டும் விஸ்வரூபம் எடுக்க தொடங்கிவிட்டது. அதிகாரிகளின் பாரமுக போக்கு, தீவிர நடவடிக்கையின்மை போன்றவற்றால் அரசின் நல்ல திட்டம் வீணாகுகிறது என்று சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். தீவிரமான, பாரபட்சமற்ற நடவடிக்கைகளும், கடுமையான தண்டனைகளுமே பிளாஸ்டிக் ஒழிப்பை சாத்தியமாக்கும் என்பதால், இனியாவது அதிகாரிகள் விழித்துக்கொண்டு அரசின் திட்டத்தை கவனமாக கையாள வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.