வெவ்வேறு விபத்துகளில் மருத்துவ கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பலி 3 பேர் படுகாயம்


வெவ்வேறு விபத்துகளில் மருத்துவ கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பலி 3 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 11 Jan 2019 3:45 AM IST (Updated: 11 Jan 2019 1:38 AM IST)
t-max-icont-min-icon

வெவ்வேறு விபத்துகளில் மருத்துவ கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பலியாயினர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

குன்னம்,

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள நக்கம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் கொளஞ்சி மகன் அறிவழகன் (வயது 22). இவர் தூத்துக் குடியில் உள்ள மருத்துவக்கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்தார். இந்த நிலையில் அறிவழகன் மற்றும் அவரது நண்பர்கள் நக்கம்பாடி தட்சிணாமூர்த்தி மகன் தமிழ்இனியன்(18), செந்துறை விக்னேஷ்(26), பெரம்பலூர் செல்வராஜ் மகன் அருண்(22) ஆகிய 4 பேரும் பெரம்பலூரில் இருந்து அரியலூர் நோக்கி ஒரு காரில் சென்று கொண்டிருந்தனர்.

பெரம்பலூர்- அரியலூர் சாலையில் தங்கநகரம் அருகே சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர தடுப்பு சுவரில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் படுகாயம் அடைந்த அறிவழகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த தமிழ்இனியன், விக்னேஷ், அருண் ஆகியோரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மற்றொரு விபத்து

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள சீராநத்தம் கீழத்தெருவை சேர்ந்தவர் தங்கவேல்(70). விவசாயியான இவர் மேலமாத்தூரில் இருந்து சீராநத்தம் கிராமத்திற்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது சடைக்கன்பட்டி பிரிவு சாலை அருகே சென்றபோது, அரியலூரில் இருந்து பெரம்பலூர் நோக்கி சென்ற வேன், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த தங்கவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த 2 விபத்துகள் குறித்தும் குன்னம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கதிரவன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story