பரங்கிப்பேட்டை அருகே ஆக்கிரமித்து கட்டப்பட்ட கோவிலை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு


பரங்கிப்பேட்டை அருகே ஆக்கிரமித்து கட்டப்பட்ட கோவிலை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 11 Jan 2019 4:30 AM IST (Updated: 11 Jan 2019 2:31 AM IST)
t-max-icont-min-icon

பரங்கிப்பேட்டை அருகே ஆக்கிரமித்து கட்டப்பட்ட கோவிலை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பரங்கிப்பேட்டை,

பரங்கிப்பேட்டை அருகே உள்ள தீர்த்தாம்பாளையம் காந்தி நகர் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு பி.முட்லூர்-சிதம்பரம் புற வழிச்சாலையில் உள்ள அரசு புறம்போக்கு இடத்தில் கன்னி கோவில் கட்டி வழிபட்டு வருகின்றனர்.

பி.முட்லூர் மெயின்ரோட்டை சேர்ந்த வெங்கடேசன் என்பவருக்கு கன்னி கோவிலின் பின்புறம் 20 ஏக்கர் விளை நிலம் உள்ளது. அவரது விளை நிலத்துக்கு சென்று வர கன்னி கோவில் தடையாக இருந்ததாக தெரிகிறது.

இதனால் வெங்கடேசன், தனது நிலத்துக்கு செல்ல இடையூறாக இருக்கும் புறம்போக்கு இடத்தில் கட்டப்பட்ட கோவிலை அகற்ற வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, புறம்போக்கு இடத்தில் கட்டப்பட்ட கோவிலை அகற்ற உத்தரவிட்டது.

அதன் அடிப்படையில் பரங்கிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் நேற்று காலை 11 மணி அளவில் பொக்லைன் எந்திரத்துடன் தீர்த்தாம்பாளையம் காந்தி நகருக்கு வந்தனர். பின்னர் அவர்கள் கோவிலை இடிக்க முயன்றனர்.

இதுபற்றி தகவல் அறிந்த அப்பகுதி பொதுமக்கள் திரண்டு வந்து, கோவிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து பொதுமக்கள், வருகிற 28-ந் தேதி வரை காலஅவகாசம் கொடுங்கள், நாங்கள் வேறு பகுதியில் கன்னி கோவிலை கட்டுகிறோம். அதன் பிறகு கோவிலை அகற்றிக் கொள்ளுங்கள் என்றனர். இதனை ஏற்றுக் கொண்ட போலீசார் கோவிலை அகற்றும் பணியை கைவிட்டு அங்கிருந்து சென்றனர்.

Next Story