நெய்வேலியில் காண்டிராக்டரிடம் ரூ.1½ கோடி மோசடி - 2 பேர் கைது


நெய்வேலியில் காண்டிராக்டரிடம் ரூ.1½ கோடி மோசடி - 2 பேர் கைது
x
தினத்தந்தி 11 Jan 2019 4:30 AM IST (Updated: 11 Jan 2019 2:39 AM IST)
t-max-icont-min-icon

நெய்வேலியில் காண்டிராக்டரிடம் ரூ.1½ கோடி மோசடி செய்த வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கடலூர், 

நெய்வேலி இந்திராநகர் வடக்குத்து ஊராட்சி அசோக்நகரை சேர்ந்தவர் வடிவேலு (வயது 54). காண்டிராக்டர். சம்பவத்தன்று நெய்வேலி காந்திநகரை சேர்ந்த காண்டிராக்டர் ஆராவமுதன் என்பவர் கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் கூடலூரில் உள்ள தனது சொத்து நீதிமன்றம் மூலம் ஏலத்துக்கு வருவதாகவும், இதனால் தனக்கு ரூ.2½ கோடி வேண்டும் என்றும் வடிவேலிடம் கூறினார். உடனே வடிவேலு ரூ.2½ கோடியை ஆராவமுதனிடம் கொடுத்தார்.

பின்னர் சில நாட்களுக்கு பிறகு ஆராவமுதன், ரூ.85 லட்சத்தை மட்டும் வடிவேலிடம் திருப்பி கொடுத்ததாக தெரிகிறது. மீதமுள்ள ரூ.1 கோடியே 65 லட்சத்துக்கு காசோலை வழங்கினார்.

அந்த காசோலையை பெற்ற வடிவேலு அதை வங்கியில் செலுத்தி பணத்தை பெற முயன்ற போது, ஆராவமுதனின் வங்கி கணக்கில் பணம் இல்லை என்று தெரிந்தது. இதனால் அந்த பணத்தை வடிவேலு ஆராவமுதனிடம் சென்று கேட்டார். அதற்கு ஆராவமுதன், அவரது மகன் மோகன் என்கிற மோகன்தாஸ் (39), ஆராவமுதன் நண்பர் குறிஞ்சிப்பாடி வானதிராயபுரம் செட்டிமுருகன் (55) ஆகிய 3 பேரும் பணத்தை தர முடியாது என்று வடி வேலுவை ஆபாசமாக திட்டி, கொலை மிரட்டல் விடுத்தனர். இது பற்றி வடிவேலு கடலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் மோசடி, ஆபாசமாக திட்டுதல், கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் போலீஸ் இன்ஸ்பெக்டர் தாரகேஸ்வரி, சப்-இன்ஸ்பெக்டர்கள் செந்தாமரை, அன்பழகன், சங்கர் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மோகன் என்கிற மோகன்தாஸ், செட்டிமுருகன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். தலைமறைவான ஆராவமுதனை தேடி வருகின்றனர்.

Next Story