பாதாள சாக்கடையை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 3 பேர் பலி


பாதாள சாக்கடையை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 3 பேர் பலி
x
தினத்தந்தி 11 Jan 2019 2:58 AM IST (Updated: 11 Jan 2019 2:58 AM IST)
t-max-icont-min-icon

பன்வெல் அருகே பாதாள சாக்கடையை சுத்தம் செய்த போது ஒப்பந்ததாரர் உள்பட 3 பேர் விஷவாயு தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

மும்பை,

நவிமும்பை பன்வெல் அருகே காலுண்டே பகுதியில் பாதாள சாக்கடையை சுத்தம் செய்யும் பணி ஒப்பந்ததாரர் விலாஸ் என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டு இருந்தது. நேற்று முன்தினம் இந்த பணியில் அவர், சச்சின் வாக்மாரே (வயது28) உள்பட 2 பேரை ஈடுபடுத்தி இருந்தார்.

சாக்கடையை சுத்தம் செய்ய உள்ளே இறங்கிய தொழிலாளர்கள் 2 பேரும் வெகுநேரமாகியும் வெளியே வரவில்லை. வெளியில் இருந்து கூப்பிட்டு பார்த்தும் இருவரும் சத்தம் கொடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த விலாஸ், அவர்கள் என்ன ஆனார்கள் என்பதை தெரிந்து கொள்வதற்காக பாதாள சாக்கடைக்குள் இறங்கினார்.

3 பேரும் பலி

ஆனால் அவரும் திரும்பவில்லை. அந்த பகுதியை சேர்ந்தவர்கள் உடனடியாக இதுபற்றி தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து பாதாள சாக்கடையில் இறங்கினார்கள். அப்போது, உள்ளே ஒப்பந்ததாரர் உள்பட 3 பேரும் மயங்கிய நிலையில் கிடந்தனர்.

3 பேரையும் தீயணைப்பு படையினர் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். பின்னர் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர் பரிசோதனையில் 3 பேரும் உயிரிழந்தது தெரியவந்தது. அவர்கள் பாதாள சாக்கடையில் விஷவாயு தாக்கி பலியானது தெரியவந்தது.

தகவல் அறிந்து வந்த பன்வெல் போலீசார் அவர்களது உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story