கரும்புக்கான நிலுவை தொகை வழங்கக்கோரி விவசாயிகள் ஒப்பாரி போராட்டம்
விருத்தாசலத்தில் கரும்புக்கான நிலுவை தொகை வழங்கக்கோரி விவசாயிகள் ஒப்பாரி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
விருத்தாசலம்,
கரும்புக்கான நிலுவை தொகையை வழங்காத சித்தூர் தனியார் சர்க்கரை ஆலையை கண்டித்தும், கரும்புக்கு மத்திய அரசு அறிவித்துள்ள தொகை மற்றும் மாநில அரசின் ஆதரவு தொகையை உடனடியாக அரசு பெற்று தர வேண்டும், மேலும் கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் வழங்குதல், விவசாய பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கும் வரை அனைத்து விவசாய கடன்களையும் தள்ளுபடி செய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் கடந்த 7-ந்தேதி முதல் விருத்தாசலம் பாலக்கரையில் காத்திருப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர். ஒவ்வொரு நாளும் வெவ்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். காதில் பூ வைத்து, பட்டை நாமம் போட்டு அரை நிர்வாண போராட்டம், நேற்று முன்தினம் எலி, பாம்பு கறி சாப்பிடும் போராட்டம் நடத்தினர். இவர்களது போராட்டம் நேற்று 4-வது நாளாக நீடித்தது.
அப்போது பாம்பு கறி சாப்பிட்டதால் விவசாயி இறந்ததுபோன்றும், அவரை பாடையில் வைத்து மேளம் அடித்து, பெண்கள் ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நூதன போராட்டத்திற்கு மாநில செயலாளர் சாத்துக்கூடல் சக்திவேல் தலைமை தாங்கினார். இதில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு, நிர்வாகிகள் அமரேசன், ராஜா, சுப்பிரமணியன், அண்ணாதுரை, சரவணன், செல்வராசு, நாகராஜன், செந்தில், சுப்பிரமணியன், வெங்கடேசன் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
அந்த சமயத்தில் ஆட்டோ டிரைவர்கள் ஊர்வலமாக அங்கு வந்து, விவசாயிக்கு மாலை போட்டு அஞ்சலி செலுத்தினர். உண்மையாக ஒருவர் இறந்தால் எவ்வாறு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடக்குமோ, அதுபோல இந்த போராட்டம் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
விவசாயிகளின் போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சியினர், சமூக அமைப்புகள் நேரில் வந்து தங்களது ஆதரவை தெரிவித்தனர். தி.மு.க. நிர்வாகிகள் இளையராஜா, ராமு உள்ளிட்ட நிர்வாகிகளும், அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாநில நிர்வாகி சோழன் சம்சுதீன், நகர செயலாளர் நடராஜன் மற்றும் நிர்வாகிகளும். பா.ம.க. நிர்வாகிகள் ராஜ தனபாண்டியன், மணிகண்டன் மற்றும் பலர் விவசாயிகளை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
இதையடுத்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
சித்தூர் சர்க்கரை ஆலைக்கு 23 மாதத்திற்கு முன்பு விவசாயிகள் தங்களது விளைநிலத்தில் விளைந்த கரும்புகளை அரவைக்காக வழங்கினார். ஆனால் பணம் இன்றுவரை விவசாயிகளுக்கு கொடுக்கவில்லை. பணத்தை கேட்டால் இன்று, நாளை என்று கூறி அலைக்கழிக்கிறார்கள். இந்த பணத்தை வாங்கி தர வேண்டிய மாவட்ட கலெக்டரும், தமிழக அரசும் கண்டு கொள்ளவில்லை. இதனால் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். ஒவ்வொரு நாளும் வெவ்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறோம். ஆனால் இதுவரை எந்த அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்த வரவில்லை. இருப்பினும் கரும்புக்கான நிலுவைத்தொகை கிடைக்கும் வரையில் எங்களது போராட்டம் ஓயாது. நாளை(அதாவது இன்று) மண்டை ஓடு ஏந்தி போராட்டத்தில் ஈடுபடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story