கோவை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி கொலை
கோவை சிறையில் உடல்நலக்குறைவால் இறந்த, ஆயுள்தண்டனை கைதி அடித்துக் கொலை செய்யப்பட்டது பிரேத பரிசோதனையில் அம்பலமானது. இது தொடர்பாக மற்றொரு கைதி சிக்கினார்.
கோவை,
திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையத்தை சேர்ந்தவர் ராமசாமி (வயது 56). இவர் அந்த பகுதியில் நடந்த ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதால் ராமசாமி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். நேற்று முன்தினம் அதிகாலை 3.40 மணி அளவில் அவர் தங்கி இருந்த சிறை அறையில் மயங்கி கிடந்தார்.
உடனே அவரை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ராமசாமி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இருதய கோளாறால் அவர் இறந்து இருக்கலாம் என்று முதலில் கருதப்பட்டது. ராமசாமி இறந்தது குறித்து கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் இன்ஸ்பெக்டர் தெய்வசிகாமணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.
இந்தநிலையில் கைதி ராமசாமியின் உடல் கோவை அரசு ஆஸ்பத்திரியில் பிரேதபரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அவரின் பின்தலை உள்பட பல இடங்களில் காயம் இருந்தது. காதில் இருந்தும் ரத்தம் வழிந்தது. இதனால் ராமசாமியின் தலையை ஏதோ ஒன்றின் மீது மோதச்செய்து கொலை செய்து இருக்கலாம் என்பது பிரேத பரிசோதனையில் தெரியவந்தது. இதை அறிந்த ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரணையை மேலும் தீவிரப்படுத்தினார்கள்.
இதில், ராமசாமி தங்கி இருந்த சிறை அறையில் ரமேஷ், சுப்பிரமணி ஆகிய 2 கைதிகள் இருந்துள்ளனர். ராமசாமி சிறையில் வேலை செய்து வைத்து இருந்த பணத்தை ரமேஷ் கடன் வாங்கியுள்ளார். அந்த பணத்தை பல முறை கேட்டும் அவர் திரும்ப கொடுக்கவில்லை. மேலும் ராமசாமி மீது ரமேஷ் ஆத்திரத்தில் இருந்தார். இந்த நிலையில் அதிகாலை நேரத்தில் ராமசாமி தூங்கிக்கொண்டு இருந்தபோது அவரின் தலையை சுவரில் மோதச்செய்து கொலை செய்து இருக்கலாம் என்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது குறித்து கைதி ரமேசிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ரமேஷ் கொலை வழக்கில் தண்டனை பெற்றவர். ஏற்கனவே சிறை ஊழியரை தாக்கிய புகாரில் தான் ரமேஷ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவை சிறைக்கு மாற்றப்பட்டு உள்ளார். இந்தநிலையில் ஆயுள் தண்டனை கைதி ராமசாமியை அவர் கொலை செய்தது மற்ற கைதிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சிறையில் கைதி கொலை செய்யப்பட்டதை அறிந்ததும், கோவை 3-வது கோர்ட்டு மாஜிஸ்திரேட்டு வேலுசாமி, கோவை சிறைக்கு சென்று விசாரணை நடத்தினார். கைதி ராமசாமி தங்கி இருந்த அறையில் இருந்த ரமேஷ் உள்பட 2 கைதிகளிடமும், அந்த அறையை தவிர்த்து மற்ற அறைகளில் இருந்த கைதிகளிடமும் விசாரணை நடத்தினார். மேலும் சிறை சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் உள்பட சிறை அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தினார்.
இதைத்தொடர்ந்து இந்த வழக்கை கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் கொலை வழக்காக மாற்ற நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். கோவை சிறையில் கைதி அடித்துக்கொலை செய்யப்பட்டு இருப்பதால், அந்த நேரத்தில் பாதுகாப்பு பணியை மேற்கொண்ட சிறை அதிகாரிகள் யார்? சிறை சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் பாதுகாப்பு விதிமுறைகளை நடைமுறைப்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொண்டாரா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.
Related Tags :
Next Story