அரசு மருத்துவமனைகளில் டீன் பணியிடங்களை நிரப்பக்கோரி வழக்கு
அரசு மருத்துவமனைகளில் டீன் பணியிடங்களை நிரப்பக்கோரிய வழக்கில் சுகாதார துறை முதன்மை செயலாளருக்கு மதுரை ஐகோர்ட்டு நோட்டீசு அனுப்பியுள்ளது. மதுரையை சேர்ந்த விஜயலட்சுமி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
மதுரை,
தமிழகத்தில் 26 மருத்துவக்கல்லூரிகள் உள்ளன. இவற்றில் மதுரை, திருச்சி, சேலம், திருவண்ணாமலை ஆகிய 4 அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் டீன் (முதல்வர்) பணியிடம் காலியாக உள்ளது. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தற்போது டீன் பொறுப்பில் டாக்டர் சண்முகசுந்தரம் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் இந்த மாதம் ஓய்வு பெறுகிறார். மருத்துவக்கல்லூரிகளில் டீன் பணியிடம் மிக முக்கியமானது. இந்த பணியிடம் காலியாக உள்ளதால் மருந்து பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாமல் உள்ளது.
இதுபோல பல்வேறு மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 20 மருத்துவ கண்காணிப்பாளர் பணியிடங்கள், 22 இருப்பிட மருத்துவ அதிகாரிகள் பணியிடங்களும் காலியாக உள்ளன. இதன் காரணமாக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் அன்றாட பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள டீன் மற்றும் அதிகாரிகள் பணியிடங்களை நிரப்ப சுகாதாரத்துறையினருக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறி இருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. முடிவில், இந்த வழக்கு குறித்து சுகாதாரத்துறை முதன்மை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Related Tags :
Next Story