ஈரோட்டில் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தை அமைச்சர்கள் ஆய்வு


ஈரோட்டில் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தை அமைச்சர்கள் ஆய்வு
x
தினத்தந்தி 11 Jan 2019 5:06 AM IST (Updated: 11 Jan 2019 5:06 AM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தை அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.

ஈரோடு,

ஈரோடு பவளத்தான் பாளையம் ஏ.ஈ.டி. பள்ளிக்கூட மைதானத்தில் வருகிற 19-ந்தேதி ஜல்லிக்கட்டு நடத்தப்பட உள்ளது. இதற்கான பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பணிகளை பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது அங்கு அமைக்கப்பட்டு உள்ள வாடிவாசல், கண்காணிப்பு கோபுரங்கள், தடுப்புகள் போன்றவற்றை பார்வையிட்டனர். பின்னர் அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்கக்கோரி அதிகாரிகளுக்கு அமைச்சர்கள் உத்தரவிட்டனர்.

அதைத்தொடர்ந்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

ஈரோடு மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்காக ஏ.ஈ.டி. பள்ளிக்கூட மைதானம் தேர்வு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

25 ஆண்டுகளுக்கு முன்பு நம்முடைய காங்கேயம் இன காளைகளை வைத்து ஈரோடு மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு உள்ளது. சிறிய அளவில் நடைபெற்றதால் மக்களுக்கு அவ்வளவாக தெரியவில்லை. காங்கேயம், வெள்ளக்கோவில், தாராபுரம் போன்ற பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு உள்ளது. கொங்கு மண்டலத்தில் சுமார் 10 கிராமங்களில் 10 முதல் 15 காளைகளை வைத்து ஜல்லிக்கட்டு நடந்துள்ளது.

தற்போது மாவட்ட கலெக்டர் தலைமையிலான குழு அரசு விதித்துள்ள விதிமுறைகளுக்கு உட்பட்டு இந்த ஜல்லிக்கட்டை நடத்தும். வருகிற 19-ந் தேதி காலை சரியாக 8.35 மணிக்கு ஜல்லிக்கட்டு தொடங்கும். அதன் பின்னர் வாடிவாசல் வழியாக காளைகள் அவிழ்த்து விடப்படும். இதை மக்கள் மகிழ்ச்சியுடன் காண்பதற்கு தேவையான அனைத்து முன் ஏற்பாடுகளும் பொதுப்பணித்துறை சார்பில் செய்யப்பட்டு உள்ளது.

பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கைக்குப்பின் பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் அவற்றை பயன்படுத்துவது குறைந்துள்ளது. பிளாஸ்டிக் பயன்பாட்டினை குறைக்க மாணவ -மாணவிகளை ஊக்கப்படுத்தி வருகிறோம். 3-ம் பருவ தேர்வுக்கான பாட புத்தகங்கள் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்பட்டு உள்ளன. நவீன முறையில் கல்வி போதிக்கும் வகையில் 80 ஆயிரம் ஆசிரியர்களுக்கு மடிக்கணினி வழங்க அரசிடம் அணுமதி கோரப்பட்டு உள்ளது. அனுமதி கிடைத்ததும் ஆசிரியர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும். கடந்த 2013-ம் ஆண்டுக்கு பின் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வான ஆசிரியர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர்.

தற்போது எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் தொடங்கப்பட்டு வருவதால் கூடுதலாக ஆசிரியர்கள் தேவைப்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது. அதுவரை நடுநிலை பள்ளிக்கூடங்களுக்கு கீழ் உள்ள ஆசிரியர்கள் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் எடுப்பார்கள். தற்போது கே.ஜி. வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டங்கள் வடிவமைக்கப்பட்டு வருகிறது. இதுதவிர மாணவர்களிடம் ஒழுக்கத்தை போதிக்கும் வகையில் நீதி போதனை வகுப்புகளும் நடத்தப்பட உள்ளது. இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

அப்போது அவருடன் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன், கலெக்டர் சி.கதிரவன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன், எம்.எல்.ஏ.க்கள். கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு, மாவட்ட வருவாய் அதிகாரி கவிதா, விளையாட்டு அதிகாரி நோயிலின் ஜான், ஆர்.டி.ஓ. முருகேசன், மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் ரமாமணி, அ.தி.மு.க. பகுதி செயலாளர்கள் ஜெகதீசன், கோவிந்தராஜ், கேசவமூர்த்தி, ஜெயலலிதா பேரவை பகுதி இணைச்செயலாளர் நந்தகோபால் உள்பட பலர் இருந்தனர்.

Next Story