ஊதியூரில் தனியார் நிறுவனம் பால் பண்ணை கட்டும் விவகாரம்: இந்து முன்னணியினர்- பொதுமக்கள் இடையே பயங்கர மோதல்; 4 பேர் காயம் கார் கண்ணாடி உடைப்பு- போலீஸ் தடியடி


ஊதியூரில் தனியார் நிறுவனம் பால் பண்ணை கட்டும் விவகாரம்: இந்து முன்னணியினர்- பொதுமக்கள் இடையே பயங்கர மோதல்; 4 பேர் காயம் கார் கண்ணாடி உடைப்பு- போலீஸ் தடியடி
x
தினத்தந்தி 11 Jan 2019 12:34 AM GMT (Updated: 11 Jan 2019 12:34 AM GMT)

ஊதியூரில் தனியார் நிறுவனம் பால்பண்ணை கட்டும் விவகாரம் தொடர்பாக இந்து முன்னணியினர்- பொதுமக்கள் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 4 பேர் காயம் அடைந்தனர். கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

காங்கேயம்,

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தை அடுத்துள்ள ஊதியூரில் பிரசித்திபெற்ற உத்தண்ட வேலாயுதசாமி கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள இந்த கோவிலுக்கு அந்த பகுதியில் சுமார் 1,200 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலையில் குண்டடம் ரோட்டில் கருக்கம்பாளையம் பிரிவு அருகில் பிரம்மாண்டமான அளவில் பால் பதப்படுத்தும் தொழிற்சாலை கட்டுமானப்பணிகளை தனியார் நிறுவனம் கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கியது.

கட்டிடப்பணிகள் நடந்து வந்த நிலையில் சிவன்மலை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தலையிட்டு “கட்டுமானப்பணிகள் நடக்கும் இடம் ஊதியூர் உத்தண்ட வேலாயுதசாமி கோவிலுக்கு சொந்தமானது என்றும், எனவே கட்டிடப்பணிகளை நிறுத்த வேண்டும்” என்றும் கூறினர். மேலும் கட்டிடப்பணிகள் நடைபெறும் இடத்தில் இந்த இடம் அறநிலையத்துறைக்கு சொந்தமானது எனவும் போர்டு வைத்தனர். ஆனால் அந்த போர்டை அகற்றிவிட்டு தொடர்ந்து கட்டிடப்பணிகள் நடைபெற்றது.

இந்த நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்து முன்னணியினர் அதன் மாநிலத்தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையில் கட்டுமானப்பணிகள் நடைபெறும் இடத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதையடுத்து கட்டுமானப்பணிகளை நிறுத்த மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.

அதன்படி கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்ட நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்போலீஸ் பாதுகாப்புடன் மீண்டும் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டது. இதையடுத்து இந்து சமய அறநிலையத்துறையின் சிவன்மலை உதவி ஆணையர் கண்ணதாசன், கோவில் நிலத்தில் கோர்ட்டு உத்தரவை மீறி கட்டிடப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இதையடுத்து மீண்டும் கடந்த 2-ந் தேதி இந்து முன்னணியினர் பால் பண்ணை கட்டுமானப்பணிகள் நடைபெறும் இடத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து அங்கு வந்த காங்கேயம் தாசில்தார் மகேஸ்வரன் கட்டுமானப்பணிகளை நிறுத்த உத்தரவிட்டார்.

இந்த நிலையில் ஜனவரி மாதம் 10-ந்தேதி (நேற்று) காலை 11 மணிக்கு கோவில் நிலத்தை தனியார் நிறுவனத்திடம் இருந்து மீட்க வலியுறுத்தி ஊதியூர் உத்தண்ட வேலாயுதசாமி கோவிலில் விளக்கேற்றி வழிபாடு நடத்தப் போவதாக இந்து முன்னணி சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. அது போல் இதே தேதியில், இதே நேரத்தில் ஊதியூர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பால் பண்ணை கட்டுமானப்பணியை தடுக்க கூடாது என்று மலையடிவாரத்தில் உள்ள கைலாசநாதர் கோவிலில் வழிபட போவதாக அறிவித்திருந்தனர்.

இரு தரப்பினரும் ஒரே நேரத்தில் நிகழ்ச்சிகளை அறிவித்து இருந்ததால், மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானதால் நேற்று காலையிலே அந்த பகுதியில் கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன், காங்கேயம் துணை போலீஸ் சூப்பிரண்டு செல்வம் ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

ஊதியூர் பொதுமக்கள் தாங்கள் அறிவித்து இருந்தபடி நேற்றுகாலை 10 மணியில் இருந்தே ஊதியூர் பகுதியை சேர்ந்த பலர் கைலாசநாதர் கோவில் முன்பு குவிந்தனர். அதேபோல் உத்தண்ட வேலாயுதசாமி கோவில் அடிவாரத்தில் 100-க்கும் மேற்பட்ட இந்து முன்னணியினர் திரண்டனர். அப்போது இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் மற்றும் நிர்வாகிகள் ஊதியூர் பஸ் நிறுத்தத்தை கடந்து கைலாசநாதர் கோவில் வழியாக சென்றபோது அங்கு நின்றிருந்த ஊதியூர் பகுதி பொதுமக்கள், திடீரென்று இந்து முன்னணிக்கு எதிராக கோஷம் போட்டனர். அப்போது இந்து முன்னணியினரும் பதிலுக்கு கோஷமிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கிடையில் திடீரென ஊதியூர் பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இவர்களுக்கு போட்டியாக இந்து முன்னணியினரும் தங்களது வாகனங்களை நிறுத்தி விட்டு 100 அடி தொலைவில் மறியல் செய்தனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் அதிகரித்தது. உடனே இருதரப்பினரையும் காங்கேயம் தாசில்தார் மகேஸ்வரன் மற்றும் போலீசார் சமாதானப்படுத்தினர். ஆனால் ஊதியூர் பகுதி பொதுமக்கள் கலைந்து செல்லாமல் அங்கேயே நின்றனர்.

இந்து முன்னணியினர் அங்கிருந்து வாகனங்களில் புறப்பட்டு மலையில் உள்ள உத்தண்ட வேலாயுதசாமி கோவிலுக்கு சென்றனர். பின்னர் வாகனங்களை மலையடிவாரத்தில் நிறுத்தி விட்டு, மலை மீதுள்ள கோவிலுக்கு சென்று தீபம் ஏற்றி சாமி தரிசனம் செய்தனர்.

பின்னர் மலையில் இருந்து கீழ் இறங்கி வந்து தங்களது வாகனங்களில் அங்கிருந்து மீண்டும் காங்கேயம் நோக்கி சென்றனர். அவர்கள் கைலாச நாதர் கோவிலை கடந்து சென்றபோது, அங்கு ஏற்கனவே கலைந்து செல்லாமல் நின்று கொண்டிருந்த பொதுமக்கள் சிலர் தங்களது காலணியை கழற்றி இந்து முன்னணியினரிடம் காட்டி, தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த இந்து முன்னணியினர் தங்களது வாகனங்களை சாலையில் நிறுத்திவிட்டு அங்கு நின்றிருந்த பால்பண்ணை ஆதரவாளர்களை நோக்கி ஆக்ரோஷமாக சென்றனர்.

அப்போது அங்கு நின்று கொண்டிருந்த போலீசார் தடுத்தும், இருதரப்பினரும் நேருக்குநேர் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர். இந்த தள்ளுமுள்ளு ஒரு கட்டத்தில் கைகலப்பாக மாறியது. அப்போது ஒருவருக்கொருவர் பயங்கரமாக தாக்கிக்கொண்டனர். அங்கு நிறுத்தப்பட்டு இருந்த ஒரு காரின் கண்ணாடியும் அடித்து நொறுக்கப்பட்டது. இதையடுத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர போலீசார் லேசான தடியடி நடத்தி விரட்டினார்கள். அதன் பின்னரே நிலைமை கட்டுக்குள் வந்தது.

இதுதொடர்பாக 2 தரப்பையும் சேர்ந்த 100 பேர் மீது ஊதியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இரு தரப்பினர் மோதிக்கொண்ட சம்பவத்தில் இந்து முன்னணி மாநில செயலாளர் கிஷோர் மற்றும் பொதுமக்கள் ராஜேஷ், கவாஸ்கர் உள்பட 4 பேர் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் அந்த பகுதியில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த மோதல் காரணமாக ஊதியூர் பகுதியில் நேற்றுகாலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கயல்விழி பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

Next Story