மாவட்ட செய்திகள்

வீட்டிற்குள் புகுந்து வியாபாரியை கொன்று நகை கொள்ளை மனைவியையும் தாக்கிவிட்டு சென்ற மர்ம ஆசாமிகளை போலீஸ் தேடுகிறது + "||" + Into the house Merchant killed Jewel robbery

வீட்டிற்குள் புகுந்து வியாபாரியை கொன்று நகை கொள்ளை மனைவியையும் தாக்கிவிட்டு சென்ற மர்ம ஆசாமிகளை போலீஸ் தேடுகிறது

வீட்டிற்குள் புகுந்து வியாபாரியை கொன்று நகை கொள்ளை மனைவியையும் தாக்கிவிட்டு சென்ற மர்ம ஆசாமிகளை போலீஸ் தேடுகிறது
பொங்கலூர் அருகே வீடு புகுந்து வியாபாரியை கொன்று நகையை கொள்ளையடித்ததோடு, தடுக்க சென்ற மனைவியையும் தாக்கி விட்டு தப்பிச் சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடிவருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பொங்கலூர்,

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் அருகே உள்ள கோவில்பாளையம் வெள்ளைப்புறா காட்டுத்தோட்டத்தை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 65). தேங்காய் வியாபாரம் செய்து வந்தார். இவர் தனது வீட்டின் அருகிலேயே தேங்காய் களம் வைத்து இருந்தார். இவருடைய மனைவி மாராத்தாள் (58). இவர்களுக்கு ராமேஸ்வரி (26) என்ற மகளும், சண்முகம் (26) என்ற மகனும் உள்ளனர். ராமேஸ்வரிக்கு திருமணமாகி கணவருடன் சேமலைக்கவுண்டம்பாளையம் பகுதியில் வசித்து வருகிறார். சண்முகத்திற்கு திருமணமாகவில்லை. பழனிசாமி தான் குடியிருந்த ஓட்டு வீட்டின் அருகிலேயே புதிய வீடு ஒன்றை கட்டி வந்தார்.


இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில் வியாபாரம் சம்பந்தமாக சண்முகம், ஆந்திர மாநிலம் சென்று விட்டார். இதனால் பழனிசாமியும், அவருடைய மனைவி மாராத்தாள் மட்டும் வீட்டில் இருந்தனர். இவர்களுடைய வீட்டிற்கு தினமும் காலையில் சதாம் உசேன் என்பவர் பால் கொண்டு வந்து கொடுப்பார். அதன்படி வழக்கம்போல் நேற்று காலை சதாம் உசேன் பால்கொண்டு சென்றார்.

அப்போது வீட்டின் வராண்டாவில் பழனிசாமி மயங்கிய நிலையில் கிடந்தார். வீட்டின் கதவு திறந்து கிடந்தது. இதையடுத்து வீட்டில் இருந்தவர்களை பால் வாங்கி செல்லுமாறு, சதாம் உசேன் பலமுறை அழைத்தும் வீட்டில் இருந்து பதில் ஏதும் வரவில்லை.

இதனால் சதாம் உசேன், தனது மொபட்டை நிறுத்தி விட்டு, பழனிசாமியின் அருகில் சென்று பார்த்தபோது அவருடைய உடல் அசைவற்று இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்னர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, அங்கு ரத்த வெள்ளத்தில் மயங்கிய நிலையில் மாராத்தாள் கிடப்பதையும், அவருடைய கழுத்து பகுதி கூர்மையான ஆயுதத்தால் குத்தப்பட்டு இருப்பதையும், கம்பி கொண்டு தாக்கியதில் அவருடைய தலையில் காயம் காணப்படுவதையும், பார்த்து அதிர்ச்சியடைந்தார். ஆனால் மாராத்தாள் காதில் போட்டு இருந்த தங்க கம்மல் அப்படியே இருந்தது.

இது குறித்து அவினாசிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கயல்விழி, பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு முத்துசாமி, அவினாசிபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுச்சாமி மற்றும் போலீசார் சம்பவம் நடந்த வீட்டிற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.

பின்னர் பழனிசாமிக்கு உயிர் இருக்கிறதா? என்று பார்த்தபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது. வீட்டிற்குள் மாராத்தாள் சுயநினைவற்ற நிலையில் கிடப்பதையும், வீட்டின் மற்றோர் அறையில் இருந்த 2 பீரோக்களும் உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதையும் பார்த்தனர். இதையடுத்து தடய அறிவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, அங்கு பதிவாகி இருந்த கைரேகை மற்றும் தடயங்களை சேகரித்தனர். பின்னர் மாராத்தாளை மீட்டு திருப்பூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பிவைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பழனிசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அதாவது பழனிசாமியின் வீட்டில் இருந்த பீரோ திறந்து கிடந்ததால், அதில் நகை மற்றும் பணம் வைக்கப்பட்டு இருந்ததா? என்று ஆந்திரா சென்றுள்ள பழனிசாமியின் மகன் சண்முகத்தை செல்போனில் போலீசார் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உடனே ஊருக்கு திரும்பினார். பின்னர் போலீசார் அவரிடம் விசாரித்தபோது பீரோவில் பணம் ஏதும் வைக்கவில்லை என்றும் 2 பவுன் நகை மட்டும் வைத்து இருந்ததாக தெரிவித்தார். எனவே அந்த 2 பவுன்நகையை மட்டும் மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிவந்தது.

பழனிசாமி புதிய வீடு கட்டி வருவதால், அந்த வீடு கட்டுவதற்கான பணத்தை வீட்டில் வைத்து இருக்கலாம் என்றும், சண்முகம் ஆந்திராவுக்கு சென்றதை தெரிந்து கொண்ட மர்ம ஆசாமிகள் சம்பவத்தன்று நள்ளிரவு பழனிசாமியின் வீட்டிற்கு சென்று உள்ளனர். அப்போது வீட்டின் வராண்டாவில் படுத்து இருந்த பழனிசாமியை எழுப்பி, வீட்டில் உள்ள நகை மற்றும் பணம் இருக்கும் இடத்தை சொல்? என்று மிரட்டி இருக்கலாம்.

அப்போதுஅவர் சொல்ல மறுத்ததால், அவரை தாக்கிய போது அவர் கூச்சல் போட்டு இருக்கலாம். பின்னர் கழுத்தை இறுக்கியபோது, பழனிசாமி இறந்து இருக்கலாம். இதற்கிடையில் கணவரின் அலறல் சத்தம் கேட்டு வீட்டினுள் படுத்து இருந்த மாராத்தாள் திடுக்கிட்டு எழுந்து கதவை திறந்து கொண்டு வெளியே வந்த போது மர்ம ஆசாமிகள், மாராத்தாளையும் தாக்கி, அவருடைய கழுத்தில் கூர்மையான ஆயுதத்தால் குத்தி உள்ளனர். இதனால் மாராத்தாளும் மயங்கி கீழே விழுந்துள்ளார். பின்னர் வீட்டின் மற்றொரு அறைக்குள் சென்ற ஆசாமிகள், அங்கிருந்த 2 பீரோக்களை உடைத்து, அதில் பணம் உள்ளதா? என்று தேடியபோது பணம் ஏதும் இல்லாததால், அங்கிருந்து 2 பவுன்நகையை மட்டும் கொள்ளையடித்து சென்று இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.

மேலும் பழனிசாமியின் வீட்டிற்கு சென்ற ஆசாமிகள், நகை மற்றும் பணத்தை கொள்ளையடிக்க வேண்டும் என்ற நோக்கில் சென்று இருந்தால் மாராத்தாள் காதில் அணிந்து இருந்த தங்கத்தோடை கொள்ளையடித்து சென்று இருக்க வேண்டும். ஆனால் அந்த தங்கத்தோடை கொள்ளையடித்து செல்லவில்லை. எனவே வழக்கு விசாரணையை திசை திருப்பும் நோக்கில், நகையை கொள்ளையடித்து சென்று இருக்கலாம் என்றும் போலீசார் கருதுகிறார்கள்.

இந்த சம்பவம் குறித்து அவினாசிபாளையம் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்கள். பொங்கலூர் அருகே வியாபாரியை கொன்று, அவருடைய மனைவியை கூர்மையான ஆயுதத்தால் தாக்கி, வீட்டில் இருந்த நகையை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.