தர்மபுரி, மொரப்பூர் உள்ளிட்ட 4 இடங்களில் 1,172 பெண்களுக்கு தாலிக்கு தங்கம் அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், டாக்டர் சரோஜா வழங்கினர்


தர்மபுரி, மொரப்பூர் உள்ளிட்ட 4 இடங்களில் 1,172 பெண்களுக்கு தாலிக்கு தங்கம் அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், டாக்டர் சரோஜா வழங்கினர்
x
தினத்தந்தி 11 Jan 2019 11:15 PM GMT (Updated: 11 Jan 2019 2:03 PM GMT)

தர்மபுரி, மொரப்பூர் உள்ளிட்ட 4 இடங்களில் 1,172 பெண்களுக்கு திருமண நிதி உதவியுடன் தாலிக்கு தங்கத்தை அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், டாக்டர் சரோஜா ஆகியோர் வழங்கினார்கள்.

மொரப்பூர்,

தர்மபுரி மாவட்ட சமூக நலத்துறை சார்பில் பெண்களுக்கு திருமண நிதி உதவியுடன் தாலிக்கு தங்கம் வழங்கும் விழா தர்மபுரி, மொரப்பூர், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய 4 இடங்களில் நடைபெற்றது. இந்த விழாக்களுக்கு கலெக்டர் மலர்விழி தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ரகமதுல்லாகான், உதவி கலெக்டர்கள் சிவன்அருள், புண்ணியகோட்டி, முன்னாள் எம்.எல்.ஏ. குப்புசாமி, நகர கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், கூட்டுறவு சங்க தலைவர்கள் செல்வராஜ், சிவப்பிரகாசம், பெரியண்ணன், கோவிந்தசாமி, மதிவாணன், நல்லத்தம்பி, ஜோதி பழனிசாமி, கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் விஸ்வநாதன், அரசு வக்கீல் பசுபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட சமூக நல அலுவலர் நாகலட்சுமி வரவேற்று பேசினார்.

இந்த விழாக்களில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், சமூக நலம் மற்றும் சத்துணவுத்திட்டத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜா ஆகியோர் கலந்து கொண்டு பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமோ படிப்பை முடித்த பெண்களுக்கு திருமண நிதி உதவியுடன் 8 கிராம் தாலிக்கு தங்கத்தை வழங்கினார்கள். இதன்படி தர்மபுரி ஒன்றியத்திற்குட்பட்ட 351 பேருக்கும், மொரப்பூர் ஒன்றியத்திற்குட்பட்ட 274 பேருக்கும், அரூர் ஒன்றியத்திற்குட்பட்ட 375 பேருக்கும், பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட 222 பேருக்கும் திருமண நிதிஉதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டது. இந்த விழாக்களில் மொத்தம் 1,172 பெண்களுக்கு ரூ.4 கோடியே 66 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பில் திருமண நிதி உதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டது.

விழாவில் அமைச்சர் சரோஜா பேசுகையில், தமிழக அரசு ஏழை பெண்களின் மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமோ படித்த ஏழை குடும்பங்களை சேர்ந்த பெண்களுக்கு திருமண நிதி உதவியுடன் தாலிக்கு 8 கிராம் தங்கம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் பயன்பெற தகுதியுடையவர்கள் முறையாக விண்ணப்பித்து பயன்பெற வேண்டும் என்று கூறினார்.

விழாவில் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசுகையில், தமிழக அரசு பொதுமக்களின் தேவைகளை அறிந்து அவற்றை நிறைவேற்றுவதற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது. குறிப்பாக உயர்கல்வித்துறையை மேம்படுத்தி மாணவ–மாணவிகளின் கல்வி தரத்தை உயர்த்த பல்வேறு அரசு கல்லூரிகளை தொடங்கி கல்வி வளர்ச்சிக்கான பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் இந்தியாவிலேயே உயர்கல்வி கற்போர் எண்ணிக்கை மிக அதிகம் உள்ள மாநிலமாக தமிழகம் விளக்குகிறது என்று பேசினார்.

இந்த விழாக்களில் கூட்டுறவு சங்க தலைவர்கள் தனபால், டாக்டர் பன்னீர், தியாகராஜன், ஜவகர், ராமலிங்கம், மூர்த்தி, செல்வம், செந்தில்குமார், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் யசோதா மதிவாணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆனந்தன், மகாலிங்கம், ரவிச்சந்திரன், கவுரி உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.


Next Story