பொங்கல் பண்டிகையையொட்டி வண்டலூர் பூங்காவில் 20 நுழைவு சீட்டு மையங்கள்


பொங்கல் பண்டிகையையொட்டி வண்டலூர் பூங்காவில் 20 நுழைவு சீட்டு மையங்கள்
x
தினத்தந்தி 11 Jan 2019 10:15 PM GMT (Updated: 11 Jan 2019 4:53 PM GMT)

பொங்கல் பண்டிகையையொட்டி வண்டலூர் பூங்காவில் 20 நுழைவு சீட்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வண்டலூர்,

வண்டலூர் பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னையை அடுத்த வண்டலூர் பூங்காவில் பொங்கல் பண்டிகையையொட்டி 1 லட்சம் பார்வையாளர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக வருகிற செவ்வாய்க்கிழமை மற்றும் 16, 17-ந் தேதிகளில் மட்டும் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை பூங்கா திறந்திருக்கும்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்கள் நெருக்கடியின்றி நுழைவு சீட்டுகளை பெறுவதற்காக 20 நுழைவு சீட்டு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இணையதளம் மூலமாக ( ww w.aazp.in மற்றும் ‘ vandalur zoo ’ செயலி (mobile app) மூலமாகவும் நுழைவுசீட்டு பதிவு செய்துகொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.

இவர்களுக்கென்று 12.1.2019 முதல் 17.1.2019 வரை 2 சிறப்பு மையங்கள் அமைக்கப்படும். பூங்காவிற்கு வருகை தரும் பார்வையாளர்கள் Debit card, Credit card மற்றும் UPI மூலமாகவும் கட்டணத்தொகையினை செலுத்த வசதி செய்யப்பட்டுள்ளது.

பூங்காவினுள் பார்வையாளர்களின் பாதுகாப்பிற்காக பல இடங்களில் பிரத்தியேகமாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கட்டுப்பாட்டு அறை மூலம் பூங்காவிற்கு வரும் நபர்கள் கண்காணிக்கப்படுவார்கள்.

பார்வையாளர்களின் வாகனங்களை நிறுத்துவதற்காக கேளம்பாக்கம் சாலையில் கிரசென்ட் பல்கலைக்கழகம் அருகில் வாகனம் நிறுத்துமிடம் ஒன்றும், தேசிய நெடுஞ்சாலையில் வி.ஜி.பி. திடலில் வாகனம் நிறுத்துமிடம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளன. வி.ஜி.பி. திடலில் உள்ள வாகனம் நிறுத்துமிடம் 17.01.2019 அன்று மட்டுமே இயங்கும். வாகன நிறுத்தும் இடங்களில் இருந்து பூங்காவிற்கு வந்து செல்ல இலவச பஸ் வசதி 14.1.2019 முதல் 17.1.2019 வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வண்டலூர் பூங்காவிற்கு வருகை தரும் பார்வையாளர்களின் வசதிக்காக சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து போதுமான அளவில் மாநகர் போக்குவரத்து கழகம் மூலம் சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளன. பார்வையாளர்கள் வசதிக்காக மாவட்ட நிர்வாகத்தின் மூலமாக கூடுதலாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதிகள் ஏற்படுத்தப்படுகிறது. மேலும் கூடுதல் கழிவறை வசதிகளும் ஏற்படுத்தப்படுகிறது. பார்வையாளர்கள் வசதிக்காக பூங்காவினுள் மருத்துவ முதல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பூங்காவிற்கு வரும் தாய்மார்கள் குழுந்தைகளுக்கு பாலூட்டுவதற்கு என பூங்காவில் 2 இடங்களில் தாய்மார்கள் பாலூட்டு அறை வசதிகள் உள்ளன.

பொங்கல் பண்டிகையின் போது பார்வையாளர்களின் வசதிக்காக மாவட்ட நிர்வாகம் காவல்துறை, தீயணைப்புத்துறை, சுகாதாரத்துறை, குடிநீர் வடிகால் வாரியம், மாநகர போக்குவரத்துத்துறை மற்றும் மின்சார வாரியம் ஆகிய துறைகள் மூலம் பூங்கா நிர்வாகம் பல சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. தமிழ்நாடு அரசு உத்தரவின்படி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பார்வையாளர்கள் பூங்காவிற்கு எடுத்துவர வேண்டாம். பூங்காவுக்கு வரும் பொதுமக்கள் மது, சிகரெட், கரும்பு போன்றவற்றை பூங்காவுக்குள் எடுத்து செல்ல அனுமதியில்லை. எனவே பார்வையாளர்கள் அவற்றை பூங்காவுக்கு கொண்டுவராமல் உரிய ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story