கூடலூர் அருகே வாழைத்தோட்டத்துக்குள் புகுந்து காட்டுயானைகள் அட்டகாசம்
கூடலூர் அருகே வாழைத் தோட்டத்துக்குள் காட்டுயானைகள் புகுந்து அட்டகாசம் செய்தன. இதில் அங்கு பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் சேதம் அடைந்தது.
கூடலூர்,
கூடலூர் மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரம் ஒட்டிய பகுதியில் அமைந்துள்ள விளைநிலங்களில் வாழை, தென்னை, மா, இலவம், புளி உள்ளிட்டவை சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இங்கு வனவிலங்குகள் அடிக்கடி புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வந்தது. இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் அகழிகள் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதன் பேரில் வனத்துறையினர் எள்கரடு, பளியன்குடி ஆகிய பகுதிகளில் 4 கிலோ மீட்டர் வரை மட்டுமே அகழிகள் அமைத்தனர். தற்போது அந்த அகழிகள் மழை வெள்ளத்தில் இருந்த இடம் தெரியாமல் உள்ளது. இதனால் வனவிலங்குகள் அடிக்கடி விளைநிலங்களில் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது.
நேற்று முன்தினம் வெட்டுக்காடு வனப்பகுதியையொட்டி உள்ள வாழைத்தோட்டத்திற்குள் 5-க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் புகுந்து அட்டகாசம் செய்தன. அங்கு இருந்த வாழை மரங்களை சேதப்படுத்திவிட்டு, அதிகாலையில் வனப்பகுதிக்குள் காட்டுயானைகள் சென்று விட்டன. இதனால் அந்தப் பகுதி விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
மேலும் விளைநிலங்களுக்குள் புகுந்து வாழை மரங்களை சேதப்படுத்தி வரும் யானைகளை விரட்ட வனத்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி விவசாயிகள் புகார் கூறி வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் சார்பில் வனப்பகுதியில் அகழிகள் அமைத்தோ அல்லது கூடுதல் வனக்காவலர்களை இரவுப் பணிகளுக்கு அமைத்து யானைகளை விரட்ட நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story