சிவகிரி தாலுகா அலுவலகத்தில் பொங்கல் பரிசை திருப்பிக்கொடுக்க விவசாயிகள் திரண்டதால் பரபரப்பு


சிவகிரி தாலுகா அலுவலகத்தில் பொங்கல் பரிசை திருப்பிக்கொடுக்க விவசாயிகள் திரண்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 11 Jan 2019 10:30 PM GMT (Updated: 11 Jan 2019 5:35 PM GMT)

சிவகிரி தாலுகா அலுவலகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பை திருப்பிக் கொடுக்க விவசாயிகள் திரண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சிவகிரி, 

மதுரை மாவட்டம் திருமங்கலம்- செங்கோட்டை வரையிலான நான்கு வழிச்சாலையை, மீனாட்சிபுரம், இனாம்கோவில்பட்டி, விசுவநாதபேரி உள்ளிட்ட பகுதிகள் வழியாக அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சிவகிரி, வாசுதேவநல்லூர், புளியங்குடி, கடையநல்லூர், தென்காசி, செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மத்தியில் பலத்த எதிர்ப்பு நிலவி வருகிறது. மேலும் இத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திருமங்கலம்- செங்கோட்டை தேசிய நெடுஞ்சாலை நன்செய் மீட்பு மற்றும் சாலை மாற்றமைப்பு சங்கம், வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதி நன்செய் விவசாயிகள் சங்கம் சார்பில், தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பையும், ஆயிரம் ரூபாய் ரொக்கத்தையும் நிராகரித்து அதனை தாசில்தாரிடம் திரும்ப கொடுக்கும் போராட்டத்தை அறிவித்திருந்தனர்.

இதையொட்டி நேற்று சிவகிரி தாலுகா அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அங்கு திரண்டு வந்த நன்செய் மீட்பு மற்றும் சாலை மாற்றமைப்பு சங்கத்தினர், விவசாயிகளிடம் வருவாய்த்துறை அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் இதுதொடர்பாக ஆலோசனை கூட்டம் நடந்தது. அப்போது விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை எடுத்துரைத்தனர். அவர்கள் கூறுகையில், “நான்கு வழிச்சாலைக்கு ராஜபாளையம், மாங்குடி, அருள்புத்தூர், தென்மலை, துரைச்சாமியாபுரம், கூடலூர், நெல்கட்டும்செவல், பாம்புகோவில் சந்தை, அரியநாயகிபுரம், கடையநல்லூர், இடைகால் விலக்கு வழியாக செங்கோட்டை வரையுள்ள மாற்றுப்பாதையில் அமைத்தால் சாலையானது வளைந்து நெளிந்து செல்லாமல் ஒரே நேர்கோட்டில் இருக்கும். விவசாய நிலங்களும் அதிகமாக இல்லை. சாலை அமைக்கும் தூரமும், செலவும் குறைவு. எனவே இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும்“ என்றனர்.அதற்கு அதிகாரிகள், இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் மற்றும் உயர் அதிகாரிகளிடம் எடுத்துரைப்பதாக தெரிவித்தனர்.

இதனை ஏற்றுக் கொண்ட விவசாயிகள், தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்தனர். பின்னர் அவர்கள் கூறுகையில், பொங்கல் பரிசு தொகுப்பை திருப்பிக் கொடுக்கும் போராட்டத்தை மாற்றி மனு கொடுத்தோம். இதற்கு சரியான பதில் வராத பட்சத்தில் அடுத்தகட்ட போராட்டம் குறித்து அறிவிக்கப்படும் என்றனர்.

Next Story