வள்ளியூரில் பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டம்


வள்ளியூரில் பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டம்
x
தினத்தந்தி 11 Jan 2019 10:00 PM GMT (Updated: 11 Jan 2019 5:42 PM GMT)

வள்ளியூரில் பொதுமக்கள் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வள்ளியூர், 

நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகாவை இரண்டாக பிரித்து புதிய தாலுகாவாக திசையன்விளை தாலுகா உருவாக்கப்பட்டது. வள்ளியூர் அருகே உள்ள கோவன்குளம் மற்றும் கண்ணநல்லூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கிராமங்களை ராதாபுரம் தாலுகாவில் இருந்து பிரித்து திசையன்விளை தாலுகாவில் இணைக்கப்பட்டது.

இதனால் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ராதாபுரம் தாலுகா அலுவலகத்துக்கு சென்ற கிராம மக்கள், தற்போது 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திசையன்விளை தாலுகா அலுவலகத்துக்கு செல்லும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாவதால், கோவன்குளம், கண்ணநல்லூர் ஆகிய 2 பஞ்சாயத்துகளையும் மீண்டும் ராதாபுரம் தாலுகாவில் இணைக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்துக்கும், அரசுக்கும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

ஆனால் இதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் கோவன்குளம், கண்ணநல்லூர் பஞ்சாயத்துகளை சேர்ந்த பொதுமக்கள் நேற்று வள்ளியூர் கலையரங்கு திடலில் ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும், பல்வேறு அமைப்பினரும் ஆதரவு தெரிவித்து உண்ணாவிரதம் இருந்தனர். மேலும் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பேசிய வசந்தகுமார் எம்.எல்.ஏ., இப்பிரச்சினை குறித்து சட்டமன்றத்தில் பேசி விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். முன்னாள் எம்.எல்.ஏ. அப்பாவு, உண்ணாவிரத போராட்டத்தை முடித்து வைத்தார்.

Next Story