புதிதாக அறிவிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மக்களிடம் கருத்துகேட்ட பிறகே கிராமங்கள் இணைக்கப்படும்


புதிதாக அறிவிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மக்களிடம் கருத்துகேட்ட பிறகே கிராமங்கள் இணைக்கப்படும்
x
தினத்தந்தி 12 Jan 2019 4:30 AM IST (Updated: 11 Jan 2019 11:37 PM IST)
t-max-icont-min-icon

புதிதாக அறிவிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மக்களிடம் கருத்து கேட்ட பிறகே கிராமங்கள் இணைக்கப்படும் என்று குமரகுரு எம்.எல்.ஏ. கூறினார்.

கள்ளக்குறிச்சி, 

விழுப்புரம் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், உளுந்தூர்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ.வுமான குமரகுரு கள்ளக்குறிச்சியில் உள்ள மாவட்ட கட்சி அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மறைந்த முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் ஆசியோடு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 2011-ம் ஆண்டு சட்டசபையில் அழகுவேல் பாபு கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக அறிவிக்கவேண்டும் என்று அப்போதைய முதல்- அமைச்சர் ஜெயலலிதாவிடம் கோரிக்கை வைத்தார். அதேபோல் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகமும், நானும் விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டத்தை அறிவிக்கவேண்டும் என்று முதல்-அமைச்சரிடம் கோரிக்கை வைத்தோம். அப்போது அவர் நிதிநிலை சரியில்லை விரைவில் செயல்படுத்துவதாக எங்களிடம் உறுதி அளித்திருந்தார்.

இந்தநிலையில் கடந்த 5-ந்தேதி சட்டசபையில் பேச எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அப்போது விழுப்புரம் மாவட்டம் 11 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கி பெரிய மாவட்டமாக உள்ளது என்றும், கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து பேசினேன். இதனை ஏற்று விழுப்புரம் மாவட்டத்தை தனியாக பிரித்து கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

அதன்படி இன்னும் ஓரிரு வாரத்துக்குள் தனியாக ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியை நியமித்து, அவரது தலைமையில் தொகுதிகள் வரையறை செய்யப்படும். விழுப்புரம் மாவட்டத்தில் எந்தெந்த ஊர்கள் சேர்க்கப்படவேண்டும் என்றும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் எந்தெந்த ஊர்கள் சேர்க்கப்படும் என அனைத்து பகுதியை சேர்ந்த மக்களிடமும் கருத்து கேட்டு தான் முடிவு எடுக்கப்படும். ஆனால் ஒருபோதும் பொதுமக்களுக்கு எதிராக அ.தி.மு.க.அரசு செயல்படாது.

ஆனால் கள்ளக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ. பிரபு மறைந்த முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவிடம் கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக அறிவிக்கவேண்டும் என கோரிக்கை வைத்ததாகவும், அதனை நிறைவேற்றாததால் டி.டி.வி. தினகரன் கட்சிக்கு சென்றதாகவும் பேட்டிகளில் கூறியுள்ளார். பிரபுவின் தந்தை அ.தி.மு.க. ஒன்றிய செயலாளராக இருக்கிறார். இங்குள்ள அ.தி.மு.க.வினர் தான் கஷ்டப்பட்டு பிரபுவை கள்ளக்குறிச்சி தொகுதியில் வெற்றி பெற செய்தார்கள். ஆனால் அவர் அ.தி.மு.க.வுக்கு துரோகம் செய்கிற வகையில் டி.டி.வி.தினகரன் பக்கம் சென்றதோடு, டி.டி.வி.தினகரன் முதல்-அமைச்சராக ஆவார் என்று பேசி வருகிறார். ஏதோ கள்ளக்குறிச்சி தொகுதியை நாங்கள் புறக்கணிப்பதாக பிரபு பேசுகிறார். இந்த குமரகுரு எம்.எல்.ஏ.வுக்கு எல்லா தொகுதியும் சமம் தான். முதல்-அமைச்சரை குறை கூறி பிரபு பேட்டி கொடுத்துள்ளார். அதனை அ.தி.மு.க.வினர் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஜெயலலிதா மரணத்தில் நீடித்து வரும் மர்மம் விரைவில் விலகும். இவ்வாறு குமரகுரு எம்.எல்.ஏ. கூறினார். 

Next Story