கொடுங்கையூரில் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் இடித்து அகற்றம்


கொடுங்கையூரில் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் இடித்து அகற்றம்
x
தினத்தந்தி 11 Jan 2019 10:45 PM GMT (Updated: 11 Jan 2019 6:32 PM GMT)

கொடுங்கையூரில் சாலையோரம் ஆக்கிரமித்து வைக்கப்பட்டு இருந்த 100-க்கும் மேற்பட்ட கடைகளை மண்டல அதிகாரிகள் இடித்து அகற்றினர்.

பெரம்பூர்,

சென்னை தண்டையார்பேட்டை 4-வது மண்டலத்துக்கு உட்பட்ட கொடுங்கையூர், முத்தமிழ்நகர், எம்.ஆர்.நகர் பகுதிகளில் சிலர் சாலையை ஆக்கிரமித்து இருபுறமும் கடைகள் வைத்து இருந்தனர். சில கடைகளின் முன்புறம் மேற்கூரையும், பெயர் பலகையும் சாலையை ஆக்கிரமித்து அமைத்து இருந்தனர்.

மேலும் முத்தமிழ்நகரில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகத்தில் 80-க்கும் மேற்பட்ட மீன், மளிகை உள்ளிட்ட கடைகள் உள்ளன. இந்த கடைகளை எடுத்த வியாபாரிகள், கடையை நடத்தாமல் முத்தமிழ்நகர் பகுதியில் சாலையோரம் கடை அமைத்து வியாபாரம் செய்து வந்தனர்.

இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக பொதுமக்களிடம் இருந்து மண்டல அதிகாரிக்கு புகார்கள் வந்தன.

இதையடுத்து 4-வது மண்டல அதிகாரி மங்களராமசுப்பிரமணியன் உத்தரவின்பேரில் நேற்று மண்டல செயற்பொறியாளர் காமராஜ், உதவி செயற்பொறியாளர் கோபி, உதவி பொறியாளர் பிரகாஷ் ஆகியோர் தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு சென்று சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டு இருந்த கடைகள் மற்றும் கடைகளுக்கு முன்பு இருந்த ஆக்கிரமிப்புகளை பொக்லைன் எந்திரம் உதவியுடன் இடித்து அகற்றினர்.

சாலையின் இருபுறமும் இருந்த 100-க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு கடைகள் அதிரடியாக இடித்து அகற்றப்பட்டன. அசம்பாவிதங்களை தவிர்க்க கொடுங்கையூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

மேலும் மாநகராட்சி வணிக வளாகத்தில் கடை எடுத்த வியாபாரிகள் முறையாக வாடகையை செலுத்தாமல் இருந்தனர். வாடகை பாக்கியை வசூலிக்கவும், பணம் செலுத்தாத கடைகளுக்கு ‘சீல்’ வைக்கவும் மண்டல அதிகாரி உத்தரவிட்டார்.

இதையடுத்து வியாபாரிகள் தங்களது வாடகை மற்றும் வரி பாக்கியை உடனடியாக உரிமம் ஆய்வாளர் திருநாவுக் கரசு தலைமையிலான அதிகாரிகளிடம் வழங்கினர். மொத்தம் ரூ.3 லட்சத்துக்கும் மேல் வசூலானது. அங்கேயே அவர் களுக்கு ரசீதும் வழங்கப்பட்டது.

மேலும் வாடகை பாக்கி செலுத்தாதவர்கள் உடனடியாக மாநகராட்சிக்கு செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் கடைகளை மூடி ‘சீல்’ வைக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.

Next Story