விழுப்புரம் ஊராட்சிகளின் உதவி இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை


விழுப்புரம் ஊராட்சிகளின் உதவி இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை
x
தினத்தந்தி 11 Jan 2019 11:00 PM GMT (Updated: 11 Jan 2019 6:57 PM GMT)

விழுப்புரம் ஊராட்சிகளின் உதவி இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத பணம் சிக்கியது.

விழுப்புரம்,

ஊராட்சிகளின் உதவி இயக்குனர் (தணிக்கை) அலுவலகங்கள் விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய இடங்களில் 2 கோட்டங்களாக செயல்பட்டு வருகிறது. விழுப்புரம் கோட்ட ஊராட்சிகளின் உதவி இயக்குனராக துரைசாமியும், கள்ளக்குறிச்சி ஊராட்சிகளின் உதவி இயக்குனராக முத்தழகும் பணியாற்றி வருகின்றனர்.

இந்த அலுவலகங்களுக்கு உட்பட்டு 22 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இந்த ஊராட்சி ஒன்றியங்களில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளுக்காக செலவிடப்படும் தொகையில் விதிகளை மீறி செலவு செய்த தொகை தொடர்பாக கணக்கு வழக்குகளில் காட்டாமல் இருப்பதற்காகவும், கணக்கில் காட்டப்பட்ட சில வகை இனங்களுக்கு தணிக்கை குழுவினர் ஆட்சேபனை தெரிவிக்காமலும், அதற்கான தணிக்கை தடையை நீக்குவதற்காகவும் ஊராட்சிகளின் உதவி இயக்குனர் அலுவலக அதிகாரிகள் ஒவ்வொரு ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பணியாற்றி வரும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் இருந்து லஞ்சம் வாங்குவதாக புகார் எழுந்தது.

இந்நிலையில் நேற்று விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் 2-வது தளத்தில் இயங்கி வரும் ஊராட்சிகளின் உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களை வரவழைத்து அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதாக விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து மாலை 5.15 மணியளவில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு தேவநாதன் தலைமையில் இன்ஸ்பெக்டர் சதீஷ், ஏட்டுகள் விஜயதாஸ், பாலமுருகன், மூர்த்தி உள்ளிட்ட 8 பேர் கொண்ட குழுவினர் விழுப்புரம் ஊராட்சிகளின் உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு திடீரென சென்றனர்.

அப்போது அங்கு உதவி இயக்குனர்கள் துரைசாமி, முத்தழகு உள்ளிட்ட அலுவலர்கள், ஊழியர்களும் இருந்தனர். இவர்களை தவிர வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் என 20-க்கும் மேற்பட்டோர் இருந்தனர். இவர்கள் அனைவரும் அலுவலகத்தை விட்டு வெளியேறாமல் உள்ளேயே அமர வைத்து அலுவலக கதவுகள் மற்றும் ஜன்னல்களை பூட்டிக்கொண்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனையை தொடங்கினர். அலுவலகத்தில் இருந்த பீரோக்கள், அலுவலர்களின் மேஜை அறைகள் ஆகியவற்றை திறந்து அங்குலம், அங்குலமாக தீவிர சோதனை செய்தனர்.

மேலும் அலுவலர்கள், ஊழியர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிலர், தணிக்கை தடையை நீக்குவதற்காக அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பதற்காக வந்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அவர்களையும் போலீசார் தீவிர சோதனை செய்தனர். இரவு 8 மணி வரை நடந்த சோதனையின்போது அந்த அலுவலகத்திற்கு வந்திருந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் என 5 பேரிடம் இருந்து ரூ.14 ஆயிரத்து 600 சிக்கியது. இந்த பணத்திற்கு உரிய கணக்கு காட்ட முடியாததால் அவற்றை போலீசார் கைப்பற்றினர். அதோடு சில முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டது. கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் முக்கிய ஆவணங்களை போலீசார், லஞ்ச ஒழிப்பு அலுவலகத்திற்கு எடுத்துச்சென்றனர். விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஊராட்சிகளின் உதவி இயக்குனர் அலுவலகத்தில் நடந்த லஞ்ச ஒழிப்பு போலீசாரின் சோதனையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story