சத்தியமங்கலம் அருகே ராஜன் நகரில் அடிக்கடி நடமாடும் சிறுத்தை; கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை


சத்தியமங்கலம் அருகே ராஜன் நகரில் அடிக்கடி நடமாடும் சிறுத்தை; கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 11 Jan 2019 10:45 PM GMT (Updated: 11 Jan 2019 7:54 PM GMT)

சத்தியமங்கலம் அருகே உள்ள ராஜன் நகரில் அடிக்கடி சிறுத்தை நடமாடுவதால் அதை கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.

சத்தியமங்கலம்,

சத்தியமங்கலம் அருகே உள்ள ராஜன் நகர் வனப்பகுதியை ஒட்டியுள்ளது. ராஜன் நகரில் உள்ள ஒரு பள்ளத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு சிறுத்தை நின்றிருந்தது. அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அதை பார்த்து அலறி அடித்து ஓடினார்கள். இதேபோல் பல முறை அந்த பள்ளத்தில் சிறுத்தை நடமாடியதை பொதுமக்கள் பார்த்தனர்.

இதனால் சிறுத்தையை கூண்டுவைத்து பிடிக்க வேண்டும் என்று வனத்துறையினரிடம் கோரிக்கை வைத்தார்கள். அதை ஏற்றுக்கொண்ட வனத்துறையினர் ராஜன் நகரை சேர்ந்த விவசாயி பாலுசாமி என்பவருடைய தோட்டத்தில் கூண்டு அமைத்தார்கள். ஆனால் அந்த கூண்டில் சிறுத்தை சிக்கவில்லை.

இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை ராஜன் நகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொள்வதற்காக சத்தியமங்கலத்தை சேர்ந்த கட்சி நிர்வாகி சேகர் என்பவர் மோட்டார்சைக்கிளில் ராஜன் நகருக்கு சென்றார். ராஜன் நகர் பள்ளத்தை அவர் கடந்தபோது, சில அடி தூரத்தில் ஒரு பெரிய சிறுத்தை ரோட்டை கடந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் மோட்டார்சைக்கிளை உடனே நிறுத்தி விட்டார். அதே நேரத்தில் ஒரு லாரியும் எதிரே வந்தது. அந்த லாரி டிரைவரும் சிறுத்தையை பார்த்து உடனே லாரியை நிறுத்திவிட்டார்.

அதன்பின்னர் சிறிது நேரம் கழித்து லாரி புறப்பட்டு சென்றது. சேகரும் அந்த இடத்தை கடந்து ராஜன் நகருக்குள் சென்று நடந்ததை பொதுமக்களிடம் கூறினார்.

அதைக்கேட்டு அவர்கள் பீதி அடைந்தார்கள். மேலும் அந்த பகுதி மக்கள் கூறும்போது, ‘அடிக்கடி பள்ளத்தில் சிறுத்தை நடமாடுகிறது. குறிப்பாக இரவு நேரத்தில் அங்கேயே நிற்கிறது. வனத்துறையினர் ராஜன் நகர் பள்ளத்தில் கூண்டுவைத்து உடனே சிறுத்தையை பிடிக்கவேண்டும்‘ என்று கோரிக்கை விடுத்தார்கள்.


Next Story