பெற்றோரை இழந்த இளம்பெண்ணுக்கு சத்துணவு அமைப்பாளர் வேலை பணிநியமன ஆணையை வீட்டிற்கே சென்று கலெக்டர் வழங்கினார்


பெற்றோரை இழந்த இளம்பெண்ணுக்கு சத்துணவு அமைப்பாளர் வேலை பணிநியமன ஆணையை வீட்டிற்கே சென்று கலெக்டர் வழங்கினார்
x
தினத்தந்தி 11 Jan 2019 11:00 PM GMT (Updated: 11 Jan 2019 7:57 PM GMT)

பெற்றோரை இழந்த இளம்பெண் வீட்டிற்கே கலெக்டர் நேரில் சென்று அவருக்கு சத்துணவு அமைப்பாளர் பணியிடத்திற்கான பணிநியமன ஆணையை வழங்கினார்.

செங்கம், 

செங்கத்தை அடுத்த புதுப்பாளையம் வீரானந்தல் கிராமத்தை சேர்ந்தவர் தமிழரசி (வயது 19). இவர் திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரியில் பி.எஸ்சி. 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கு கலையரசி (17) என்ற தங்கையும், தினேஷ் (15) என்ற தம்பியும் உள்ளனர்.

கலையரசி வாலாஜாவில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் பி.எஸ்சி. 2-ம் ஆண்டும், தினேஷ் அரசு பள்ளியில் 12-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். இவர்களுடைய தந்தை வெங்கடேசன் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவால் இறந்து விட்டார்.

தமிழரசியின் தாயார் சாந்தி புதுப்பாளையத்தில் உள்ள அங்கன்வாடியில் சமையல் உதவியாளராக பணியாற்றி வந்தார். அவரும் கடந்த நவம்பர் மாதம் உடல்நலக்குறைவால் இறந்து விட்டார்.

சாந்தி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தபோது தமிழரசி, திருவண்ணாமலை மாவட்ட கலெக்டரிடம் தனது தாயார் உடல்நிலை குறித்தும், தனது குடும்ப சூழ்நிலை குறித்தும் மனு கொடுத்துள்ளார். இதையடுத்து சாந்தியின் சிகிச்சைக்கு கலெக்டர் உதவியுள்ளார். ஆனால் சிகிச்சை பலனின்றி சாந்தி உயிரிழந்தார்.

இதைத் தொடர்ந்து சாந்தியின் பணியிடத்தை வாரிசு அடிப்படையில் அவரது மகள் தமிழரசிக்கு வழங்க கலெக்டர் நடவடிக்கை எடுத்தார். இதனையடுத்து அதற்கான பணிநியமன ஆணையை தமிழரசியின் வீட்டிற்கே நேரில் சென்று கலெக்டர் கந்தசாமி வழங்கினார். தமிழரசியின் தங்கை கலையரசிக்கு திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரிக்கு இடமாற்றம் செய்யவும் ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார். பின்பு அவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார்.

பின்னர் தமிழரசியிடம் ரூ.3 லட்சத்திற்கான காசோலையையும் வழங்கி நன்றாக படித்து வாழ்வில் முன்னேற வேண்டும் என்று கூறினார். தமிழரசி இது குறித்து கூறுகையில் கலெக்டர் கந்தசாமி எனக்கு வழிகாட்டி என்று கூறினார். இதைத் தொடர்ந்து தமிழரசி, கலையரசி, தினேஷ் மற்றும் அவர்களது பாட்டி ஆண்டாள் உள்ளிட்டோர் கலெக்டருக்கு மணமுருக நன்றி கூறினர்.

இதை தொடர்ந்து வீட்டின் வெளியே வந்த கலெக்டரிடம் அங்கிருந்த சிறுவர்கள் ஆர்வமுடன் ஆட்டோகிராப் வாங்கி செல்பி எடுத்துக்கொண்டனர். அப்போது கலெக்டரின் நேர்முக உதவியாளர்(சத்துணவு) தமிழரசி, உதவி கணக்காளர் பெருமாள், பயிற்சி கலெக்டர் பிரதாப், உதவி கலெக்டர் உமாமகேஸ்வரி, தாசில்தார் சங்கரன், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்த் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Next Story