சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மூலம் 39 சதவீதம் விபத்துகள் குறைந்துள்ளன c பேட்டி
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மூலம் மாவட்டத்தில் 39 சதவீத விபத்துகள் குறைந்துள்ளன என்று கலெக்டர் ரோகிணி தெரிவித்தார்.
சேலம்,
சேலம் கலெக்டர் அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு மையம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் கலெக்டர் ரோகிணி கலந்து கொண்டு மையத்தை திறந்து வைத்து பார்வையிட்டார். பின்னர் அவர் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை பள்ளி மாணவிகளுக்கு வழங்கினார்.
பின்னர் கலெக்டர் ரோகிணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சாலை பாதுகாப்பு மையம் அமைக்கப் பட்டுள்ளது. இதனை கலெக்டர் அலுவலகத்துக்கு வரும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பார்வையிட்டு பயன்பெறுவார்கள்.
மாவட்ட நிர்வாகம் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் சார்பில் சாலை பாதுகாப்பு குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் 2017-ம் ஆண்டை விட 2018-ம் ஆண்டு 39 சதவீத விபத்துகள் குறைந்துள்ளன. அனைவரும் சாலை விதிமுறைகளை கடைபிடித்து விபத்துகளை குறைக்க உதவ வேண்டும்.
பள்ளி மாணவ-மாணவிகள் சாலைகளை கடக்கும் போது கவனமுடன் கடக்க வேண்டும். ஓட்டுனர் உரிமம் இல்லாமல் இரு சக்கர வாகனங்களை ஓட்டக்கூடாது. போக்குவரத்து விதிமுறைகள் குறித்து அறிந்து, தங்களது பெற்றோர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் போக்குவரத்து துணை ஆணையர் சத்தியநாராயணன், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தாமோதரன், சரவணபவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story