மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து பிரதமருக்கு ஒரு லட்சம் அஞ்சல் அட்டைகள் அனுப்பும் போராட்டம்


மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து பிரதமருக்கு ஒரு லட்சம் அஞ்சல் அட்டைகள் அனுப்பும் போராட்டம்
x
தினத்தந்தி 11 Jan 2019 9:30 PM GMT (Updated: 11 Jan 2019 8:29 PM GMT)

மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என வலியுறுத்தி விவசாயிகள் பிரதமர் மோடிக்கு ஒரு லட்சம் அஞ்சல் அட்டைகள் அனுப்பும் போராட்டம் நடத்தினர்.

தொட்டியம்,

மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என வலியுறுத்தி தமிழ்நாடு நீர்பாசன விவசாயிகள் நலச்சங்கத்தின் சார்பில் பிரதமர் நரேந்திரமோடிக்கு ஒரு லட்சம் அஞ்சல் அட்டைகள் (போஸ்ட்கார்டு) அனுப்பும் போராட்டம் தொட்டியம் தபால் நிலையத்தில் சங்க மாநிலத்தலைவர் ராஜாராம் தலைமையில் நடைபெற்றது.

இதில் பொதுச்செயலாளர் காந்திபித்தன், துணைத்தலைவர்கள்் சுகுமார், பாலசுப்பிரமணிய தீட்சதர், மருதைபிள்ளை, தியாகராஜன்பிள்ளை, மணிகுட்டி அய்யர் உள்பட பலர் கலந்து கொண்டு அஞ்சல் அட்டைகளை அனுப்பினர்.

இது குறித்து மாநிலத்தலைவர் ராஜாராம் கூறும்போது, காவிரியில் கர்நாடக அரசு மத்திய, மாநில அரசு அனுமதி இல்லாமல் தன்னிச்சையாக பல அணைகளை கட்டியுள்ளது. தற்போது மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கிறது. அதனை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். அப்படி அங்கு அணை கட்டினால் தமிழ்நாடு பாலைவனமாகிவிடும். அணைகட்டுவதை தடுக்க கடைசி முயற்சியாக காவிரி டெல்டா பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பிரதமர் நரேந்திரமோடிக்கு ஒரு லட்சம் அஞ்சல் அட்டைகள் அனுப்பும் போராட்டத்தை தொடங்கி உள்ளோம் என்றார்.

Next Story