பொங்கல் பொருட்கள் வழங்குவது குறித்து அமைச்சரவையை கூட்டாதது ஏன்? அன்பழகன் எம்.எல்.ஏ. கேள்வி
பொங்கல் பொருட்கள் குறித்து முடிவு எடுக்க அமைச்சரவையை கூட்டாதது ஏன்? என்று அன்பழகன் எம்.எல்.ஏ. கேள்வி எழுப்பினார்.
புதுச்சேரி,
புதுவை அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:–
புதுவையில் தி.மு.க. துணையோடு ஆட்சி நடத்தும் காங்கிரஸ் அரசு மக்கள் நலன் சார்ந்த பிரச்சினையில் போட்டி போட்டுக்கொண்டு துரோகம் இழைப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளது. வாக்களித்த மக்களுக்கும், மாநில வளர்ச்சிக்கும் துணையாகவும் பொறுப்பாகவும் இருக்கவேண்டிய அரசும், கவர்னரும் தங்களின் அறிவாற்றலை பயன்படுத்தி மக்களை ஏமாற்றுவதில் குறியாக உள்ளனர்.
பொங்கல் பண்டிகைக்கு அனைத்து மக்களுக்கும் பொங்கல் பொருள் தருவது நடைமுறையில் உள்ளது. பொங்கலை முன்னிட்டு ரூ.135 மதிப்புள்ள பொருட்களை அனைவருக்கும் வழங்க முடிவு செய்யப்பட்டது.
ஆனால் கடந்த ஆண்டு வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு மட்டும் கொடுக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக கவர்னர் தொடர்ந்து சொல்லி வருகிறார். இதை முதல்–அமைச்சரும், துறையின் அமைச்சரும் மறுக்கவில்லை.
கடந்த ஆண்டே மக்களுக்கு வஞ்சனை செய்ய இந்த அரசு முடிவு செய்துள்ளது. ஆனால் தமிழக அரசு பொங்கல் பொருட்களுடன் ரூ.1000 ரொக்கம் வழங்குவதாக அறிவித்தது. அனைவருக்கும் ரூ.1000 பொங்கல் பரிசு வழங்கத்தான் ஐகோர்ட்டு தடை விதித்தது. ஆனால் உணவுப்பொருட்களை கொடுக்கலாம் என்று கூறி உள்ளது.
இந்த தீர்ப்பைப்பற்றி சரியாக தெரியாமல் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசு என்று கவர்னர் கூறுகிறார். ஐகோர்ட்டு இலவச பொருட்கள் வழங்குவதில் தலையிடவில்லை. அதை கவர்னர் புரிந்துகொள்ளாமல் இருப்பது தவறானது.
பொங்கல் பரிசு தொடர்பாக அமைச்சரவையை கூட்டி முடிவு செய்யப்படும் என்று முதல்–அமைச்சரும் கூறினார். ஆனால் பொங்கல் பொருட்கள் தொடர்பான கோப்பினை கடந்த 10 நாட்களுக்கு முன்பே கவர்னர் திருப்பி அனுப்பிவிட்டார். அப்படியிருக்க இன்னமும் அமைச்சரவையை கூட்டாதது ஏன்? உள்நோக்கத்தோடு இந்த அரசின் செயல்பாடு உள்ளது.
இந்த நிலையில் 2 அமைச்சர்கள் ஐதராபாத்துக்கு சென்றுள்ளனர். கவர்னர் கிரண்பெடியும் ஐகோர்ட்டு தீர்ப்பினை திரித்து கூறி வருகிறார். அவரது கருத்து தொடர்பாக ஐகோர்ட்டு தானாக முன்வந்து விசாரிக்க வேண்டும்.
இவ்வாறு அன்பழகன் எம்.எல்.ஏ. கூறினார்.