பொருட்களுக்கு பதிலாக வழங்க ஏற்பாடு: சிவப்பு ரே‌ஷன் கார்டுகளுக்கு ரூ.135 பொங்கல் பரிசு, கவர்னர் உத்தரவு


பொருட்களுக்கு பதிலாக வழங்க ஏற்பாடு: சிவப்பு ரே‌ஷன் கார்டுகளுக்கு ரூ.135 பொங்கல் பரிசு, கவர்னர் உத்தரவு
x
தினத்தந்தி 11 Jan 2019 11:00 PM GMT (Updated: 11 Jan 2019 8:43 PM GMT)

சிவப்பு ரே‌ஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பொருட்களுக்கு பதிலாக தலா ரூ.135 வழங்க கவர்னர் கிரண்பெடி உத்தரவிட்டுள்ளார். அவரவர் வங்கிக்கணக்கில் வருகிற 14–ந் தேதி செலுத்தப்படும்.

புதுச்சேரி,

புதுவை மாநிலத்தில் அனைத்து ரே‌ஷன் கார்டுதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக பச்சரிசி, வெல்லம், துவரம் பருப்பு, உலர் திராட்சை, முந்திரி பருப்பு உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய தொகுப்பு அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டது.

அதன்படி இந்த ஆண்டும் அனைவருக்கும் பொங்கல் பரிசு வழங்க புதுவை அரசு முடிவு எடுத்தது. அதற்கான கோப்புகளை தயாரித்து கவர்னரின் அனுமதிக்காக அனுப்பப்பட்டது. ஆனால் பழைய விதிமுறைகளை அவர் சுட்டிக்காட்டி சிவப்பு ரே‌ஷன் கார்டுதாரர்களுக்கு மட்டுமே பொங்கல் பொருட்கள் வழங்கப்படும் என தெரிவித்தார்.

பொங்கல் பண்டிகைக்கு 3 நாட்கள் உள்ள நிலையில் இலவச பொருட்கள் வழங்குவது தொடர்பாக அரசு சார்பில் அனுப்பி வைக்கப்பட்டு கோப்புகள் இங்கும் அங்குமாக திருப்பி அனுப்பப்பட்டு வந்தது.

இந்த நிலையில் சிவப்பு ரே‌ஷன் கார்டுதாரர்களுக்கு மட்டும் பொங்கல் பண்டிகை பரிசு பொருட்களுக்கு பதிலாக பணமாக ரூ.135 வழங்க கவர்னர் கிரண்பெடி உத்தரவிட்டுள்ளார். அதன்படி வருகிற 14–ந் தேதி அவரவர் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.


Next Story