பொங்கலூர் அருகே பொங்கல் பரிசு பொருட்கள் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
பொங்கலூர் அருகே பொங்கல் பரிசு பொருட்கள் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பொங்கலூர்,
பொங்கலூர் அருகே உள்ள அலகுமலையில் வேலம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் அலகுமலை ரேஷன்கடை செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் அலகுமலை ரேஷன்கார்டுதாரர்கள் பொங்கல் பரிசு பெறுவதற்காக நேற்று தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்திற்கு வந்திருந்தனர்.
இதே போல் இதே கூட்டுறவு சங்கத்தின் கீழ்செயல்படும் வேலாயுதம்பாளையத்தில் உள்ள மற்றொரு ரேஷன்கடையை சேர்ந்த ரேஷன்கார்டுதாரர்களுக்கும் பொங்கல் பரிசு பொருட்கள் வாங்குவதற்காக வந்திருந்தனர். 2 ரேஷன்கடைகளை சேர்ந்தவர்களும் பொங்கல் பரிசு வாங்குவதற்கு வந்திருந்ததால் விற்பனையாளர் மலர்கொடி யாருக்கு வழங்குவது? என தெரியாமல் தவித்தார்.
அப்போது அலகுமலை ரேஷன் கடையை சேர்ந்த பொதுமக்கள் தங்களுக்கு தான் பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கவேண்டும் என்று கூறி வாக்குவாதம் செய்தனர். பின்னர் அவர்கள் நேற்று மதியம் 1 மணி அளவில் ரேஷன்கடை முன்பு சாலையில் அமர்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அலகுமலையில் இருந்து குமாரபாளையம் செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அந்த வழியாக திருப்பூருக்கு வந்த அரசு பஸ் உள்பட ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு சென்ற அவினாசிபாளையம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் கோவர்தனாம்பிகை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் மறியலை கைவிட்டனர். இந்த மறியலால் அப்பகுதியில் 15 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் உணவு வழங்கல் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து 2 ரேஷன் கடைகளை சேர்ந்த ரேஷன்கார்டுதாரர்களுக்கும் பொங்கல் பரிசு பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்தார். இதை தொடர்ந்து 2 ரேஷன்கடையை சேர்ந்த பொதுமக்களும் பொங்கல் பரிசு பெற்று சென்றனர்.