கோத்தகிரி அருகே மரத்தில் அமர்ந்து ஓய்வெடுத்த கரடி


கோத்தகிரி அருகே மரத்தில் அமர்ந்து ஓய்வெடுத்த கரடி
x
தினத்தந்தி 11 Jan 2019 11:00 PM GMT (Updated: 11 Jan 2019 9:08 PM GMT)

கோத்தகிரி அருகே கரடி ஒன்று மரத்தில் அமர்ந்து ஓய்வெடுத்தது.

கோத்தகிரி,

கோத்தகிரி அருகே எஸ்.கைகாட்டியில் இருந்து கூக்கல்தொரைக்கு செல்லும் சாலையில் பாண்டியன் நகர் பிரிவு உள்ளது. இங்குள்ள ஒரு தேயிலை தோட்டத்தில் சில்வர் ஓக் மரத்தின் மீது குட்டி கரடி ஒன்று அமர்ந்து ஓய்வெடுத்து கொண்டிருப்பதை நேற்று முன்தினம் அந்த வழியாக சென்ற சிலர் கண்டனர். இந்த தகவலையடுத்து குட்டி கரடியை காண அப்பகுதியில் பொதுமக்கள் திரண்டனர். பொதுமக்கள் கூட்டத்தை பார்த்து மிரண்ட குட்டி கரடி கீழே இறங்காமல், மரத்திலேயே அமர்ந்திருந்தது. இதற்கிடையில் மரத்தின் கீழே நின்றிருந்த தாய் கரடி திடீரென சத்தமிட்டது. இதை கேட்ட பொதுமக்கள் அங்கிருந்து அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

பின்னர் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் கட்டபெட்டு வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். ஆனால் தாய் கரடி அங்கு நின்று கொண்டிருந்ததால், குட்டி கரடியை மரத்தில் இருந்து கீழே இறக்கி வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினரால் முடியவில்லை. மேலும் தாய் கரடியும் அங்கிருந்து செல்லவில்லை. இதனால் வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து நேற்று அதிகாலை மரத்தில் இருந்து குட்டி கரடி கீழே இறங்கியது. அதன்பின்னர் 2 கரடிகளும் வனப்பகுதிக்குள் சென்றன.

இதேபோல் நேற்று முன்தினம் மாலை மஞ்சூர்-கோவை சாலையில் கெத்தை அருகே கரடி ஒன்று உலா வந்தது. இதை பார்த்த வாகன ஓட்டிகள் பீதி அடைந்தனர். மேலும் அந்த வழியே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுமார் 30 நிமிடங்கள் சாலையில் உலா வந்த கரடி, அதன்பிறகு வனப்பகுதிக்குள் சென்றது.

இதையடுத்து அந்த வழியே மீண்டும் போக்குவரத்து தொடங்கியது.

Next Story