குடிநீர் கேட்டு பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
கோத்தகிரியில் குடிநீர் கேட்டு பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
கோத்தகிரி,
கோத்தகிரி கடைவீதி பகுதியில் 350-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள மக்களின் குடிநீர் தேவை ஈளாடா தடுப்பணை மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது. அதாவது தடுப்பணையில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர் ராம்சந்த் சதுக்கத்தில் உள்ள நீர்உந்து நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து கடைவீதி குடியிருப்புகளுக்கு குடிநீராக வினியோகிக்கப்படுகிறது. வழக்கமாக வாரம் 2 முறை குடிநீர் வினியோகிக்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த 2 வாரங்களாக கடைவீதி பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகிக்கப்படவில்லை என தெரிகிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் குடிநீர் கேட்டு கோத்தகிரி பேரூராட்சி அலுவலகத்தை நேற்று திடீரென முற்றுகையிட்டனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-
குடிநீர் வினியோகிக்கப்படாதது குறித்து அதிகாரிகளிடம் முறையிட்டோம். அப்போது ஈளாடா தடுப்பணையில் உள்ள நீரேற்று நிலையத்தில் மோட்டார் பழுதடைந்து விட்டது, அதனை சரி செய்து தண்ணீரை ராம்சந்த் சதுக்கத்தில் உள்ள நீர்உந்து நிலையத்துக்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்தோம், ஆனால் அதற்குள் ஈளாடாவில் இருந்து குருக்குத்தி வழியாக ராம்சந்த் சதுக்கத்துக்கு தண்ணீர் கொண்டு வரும் குழாயை காட்டெருமை மிதித்து சேதப்படுத்தி விட்டது, அதனை சரி செய்யும் பணி நடந்து வருகிறது, அதன்பின்னர் குடிநீர் வினியோகிக்கப்படும் என்று தெரிவிக்கின்றனர். கடந்த 2 வாரங்களாக இதையே சொல்லி வருகின்றனர். இதனால் குடிநீர் இன்றி கடும் அவதி அடைந்து வருகிறோம். மாற்று ஏற்பாடு செய்து, குடிநீர் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
இதையடுத்து முற்றுகையில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேரூராட்சி செயல் அலுவலர் குணசேகரன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இன்னும் 2 நாட்களில் குழாய் சீரமைப்பு பணிகள் முடிந்துவிடும், அதன்பிறகு சீராக குடிநீர் வினியோகிக்கப்படும், அதுவரை லாரிகள் மூலம் குடிநீர் வினியோகிக்கவோ அல்லது மிஷன் காம்பவுண்ட் பகுதியில் இருந்து குழாய் மூலம் குடிநீர் வினியோகிக்கவோ நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதை ஏற்று பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story