இயற்பியல் கோட்பாடுகளில் பல்வேறு குளறுபடிகள் ஊட்டியில் விஞ்ஞானி கண்ணன் பேட்டி
இயற்பியல் கோட்பாடுகளில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன என்று ஊட்டியில் விஞ்ஞானி கண்ணன் பேட்டி அளித்தார்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே ஜெகதளா கிராமத்தை சேர்ந்த விஞ்ஞானி கண்ணன் ஆஸ்திரேலியாவில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று ஊட்டியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-
கடந்த 4-ந் தேதி பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் நடைபெற்ற இந்திய அறிவியல் மாநாட்டில் நான் கலந்துகொண்டு உரையாற்றினேன். இயற்பியல் கோட்பாட்டில் புவிஈர்ப்பு எதிர் விசை குறித்து ஐசக் நியூட்டன், ஐன்ஸ்டின் ஆகியோரது கருத்து சரியானது அல்ல தவறு என தெரிவித்தேன். ஐசக் நியூட்டனிடம் விஞ்ஞானிகள் கேட்டபோது, அவரிடம் இருந்து எந்த தெளிவான பதிலும் பெற வில்லை. ஆகவே இயற்பியல் கோட்பாடுகளில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன.
அவைகளுக்கு என்னால் தீர்வு காண முடியும் என்று தெரிவித்தேன். உலக சமுதாய சேவா அமைப்பின் நிறுவனர் வேதாத்திரி மகரிஷி கண்டுபிடித்த இறைவெளியின் தன்னிறுக்க சூழ்ந்து அழுத்தும் ஆற்றல் தான், இந்த பிரபஞ்சம் முழுவதிலும் உள்ள அனைத்து பொருட்களும் இயங்கி வருகிறது என்பதனை மூத்த பேராசிரியர் சத்தியமூர்த்தி கோட்பாடாக விளக்கியதன் அடிப்படையில் நான் ஆராய்ச்சி மூலம் விளக்கமாக கூறினேன்.
மேலும் இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் கருத்தும் தவறானது எனவும், அதற்கான பதில் என்னிடம் இருக்கிறது என்று கடந்த 2017-ம் ஆண்டு மின்னஞ்சல் மூலம் தெரிவித்து இருந்தேன். பிரதமர் மோடி அறிவியல் விஞ்ஞான ஆராய்ச்சிக்காக ரூ.ஆயிரம் கோடி ஒதுக்கி ஆராய்ச்சி கூடம் அமைக்க உதவி உள்ளார். இதனால் ஆய்வு செய்யும் விஞ்ஞானிகள் பெருமிதம் அடைந்து வருகின்றனர். கடந்த ஆண்டு 105-வது அறிவியல் மாநாட்டில் கலந்துகொண்ட மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மந்திரி உரையின் போது, எனது ஆய்வறிக்கை அடிப்படையில் ஐன்ஸ்டின் கோட்பாடை விட வேகத்தில் சிறந்த கோட்பாடு உள்ளதாக அறிவித்தார்.
அதற்காக ஈர்ப்பு விசை ஒளி விளைவுக்கு ஹர்ஷவர்தன் விளைவு என்று பெயர் சூட்ட உள்ளேன் என்று தெரிவித்தேன். இதன் மூலம் உலகம் முழுவதும் ஹர்ஷவர்தன் கோட்பாடு பற்றி அனைத்து விஞ்ஞானிகளும் பேசுவார்கள் என்று நான் கூறியது தவறான புரிதலால் எடுத்துக்கொள்ளப்பட்டு உள்ளது. ஹர்ஷவர்தன் விதி என்று விஞ்ஞானத்தில் வரும் போது, அது நியூட்டன் விதி போல் காலம், காலமாய் பல தலைமுறைக்கு நிலைத்து இருக்கும். இயற்பியல் கோட்பாடு குறித்து நான் கண்டுபிடித்த விதிகள் 40 நாடுகளில் இருக்கும் 400 விஞ்ஞானிகளுக்கும், பிரதமர், தேசிய அறிவியல் காங்கிரஸ் தலைவர் உள்ளிட்டோருக்கு கடிதம் மூலம் மின்னஞ்சலில் அனுப்பி தெரிவித்து உள்ளேன். அதில் சில கேள்விகளும் எழுப்பி இருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story