நடப்பு ஆண்டில் 32 விண்வெளி திட்டங்கள் ‘இஸ்ரோ’ தலைவர் சிவன் அறிவிப்பு


நடப்பு ஆண்டில் 32 விண்வெளி திட்டங்கள் ‘இஸ்ரோ’ தலைவர் சிவன் அறிவிப்பு
x
தினத்தந்தி 11 Jan 2019 11:15 PM GMT (Updated: 11 Jan 2019 9:25 PM GMT)

நடப்பு ஆண்டில் 32 விண்வெளி திட்டங்களை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், ‘ஜிசாட்-30’ செயற்கைகோள் செப்டம்பர் மாதம் விண்ணில் ஏவப்படுகிறது என்றும் ‘இஸ்ரோ’ தலைவர் சிவன் அறிவித்தார்.

பெங்களூரு,


இந்திய விண்வெளி ஆய்வு மைய (இஸ்ரோ) தலைவர் சிவன் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

32 விண்வெளி திட்டங்கள்

நடப்பு ஆண்டில் 32 விண்வெளி திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்துள்ளோம். இதில் 14 திட்டங்கள் செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தும் ராக்கெட் வாகனங்கள் ஆகும். இதில் எஸ்.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகள் தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளோம்.

500 கிலோ எடை உள்ள செயற்கைகோள்களை இந்த ராக்கெட்டில் செலுத்த முடியும். இதை 72 மணி நேரத்தில் 6 பேர் மூலம் உருவாக்க முடியும். இதை உருவாக்க பொருட் செலவு குறைவு. அதாவது ரூ.30 கோடியில் இந்த சிறிய ரக ராக்கெட் உருவாக்கப்படும்.

‘ஜிசாட்-30’ செயற்கைகோள்

இதை வருகிற ஜூலை மாதம் உருவாக்கி செயல்படுத்த முடிவு செய்துள்ளோம். நாட்டை இணைக்கும் வகையில் அதிக திறன் கொண்ட உயர் அலைவரிசை தொடர்பு வசதிகளை கொடுக்க வேண்டியது அவசியம்.

இதற்காக ‘ஜிசாட்-30’ செயற்கைகோளை விண்ணில் செலுத்த உள்ளோம். நமது உயர் அலைவரிசை தேவையை இந்த செயற்கைகோள் பூர்த்தி செய்யும். இந்த செயற்கைகோள் வருகிற செப்டம்பர் மாதம் விண்ணில் செலுத்தப்படும்.

விமான தொடர்பு வசதிகள்

இந்த செயற்கைேகாள் மூலம் கிடைக்கும் உயர் அலைவரிசையால் விமான தொடர்பு வசதிகளும் கிடைக்கும். பயன்படுத்திய ராக்கெட்டை மீண்டும் பயன்படுத்தும் வகையில் ராக்கெட்டுகளை உருவாக்க திட்டமிட்டுள்ளோம். இதற்கான செயல்விளக்க திட்டம் இந்த ஆண்டு மேற்கொள்ளப்படும்.

இன்னொரு புதிய திட்டம் என்னவென்றால், பி.எஸ்.எல்.வி. ராக்கெட் உற்பத்தியில் தனியார் நிறுவனங்களை ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் எச்.ஏ.எல். மற்றும் எல் அன்ட் டி நிறுவனம் ஈடுபட உள்ளது. இது மிக முக்கியமான முடிவு ஆகும். இதன் மூலம் தனியார் துறைக்கு வாய்ப்புகள் கிடைக்கும்.

நூற்றாண்டு விழா

அதற்கு அடுத்தப்படியாக ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் தயாரிக்கும் பணியிலும் தனியார் நிறுவனங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும்.

நாடு முழுவதும் விண்வெளி ஆராய்ச்சி மையங்களை தொடங்க முடிவு செய்துள்ளோம். அதே போல் 6 விண்வெளி தீர்வு மையங்களும் ஏற்படுத்தப்படும். விக்ரம் சாராபாய் நூற்றாண்டு விழா வருகிற ஆகஸ்டு மாதம் முதல் ஓராண்டு கொண்டாடப்படும்.

இவ்வாறு சிவன் கூறினார்.

Next Story