பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் பெண்ணுக்கு 4 கிலோ 400 கிராம் எடையுடன் பிறந்த ஆண் குழந்தை


பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் பெண்ணுக்கு 4 கிலோ 400 கிராம் எடையுடன் பிறந்த ஆண் குழந்தை
x
தினத்தந்தி 12 Jan 2019 5:30 AM IST (Updated: 12 Jan 2019 3:35 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் பெண்ணுக்கு 4 கிலோ 400 கிராம் எடையுடன் அழகான ஆண் குழந்தை பிறந்தது. அறுவை சிகிச்சை இல்லாமல் சுகபிரசவம் பார்த்து டாக்டர்,செவிலியர்கள் சாதனை படைத்தனர்.

பொள்ளாச்சி,

திண்டுக்கல் அருகே உள்ள ஒட்டன்சத்திரத்தை சேர்ந்தவர் சுரேஷ். இவர் திண்டுக்கல் மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ரத்தினபிரியா (வயது 28). இவர்களுக்கு 3 வயதில் நிதின் என்ற குழந்தை உள்ளது. இந்த நிலையில் ரத்தினபிரியா 2-வதாக கர்ப்பமானார். இதையடுத்து பிரசவத்திற்காக பொள்ளாச்சி அருகே ரெட்டியாரூரை அடுத்த கோடாங்கிபட்டியில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு அவர் வந்தார்.

இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியான அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதை தொடர்ந்து நேற்று முன்தினம் பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதற்கிடையில் நேற்று மீண்டும் வலி ஏற்பட்டதால், அவரை பிரசவ அறைக்கு அழைத்து சென்றனர். அங்கு டாக்டர் வித்யா நந்தினி தலைமையில் செவிலியர்கள் சுப்புலட்சுமி, ரேவதிமாலா ஆகியோர் பிரசவம் பார்த்தனர். மதியம் சரியாக 1.32 மணிக்கு ரத்தின பிரியாவுக்கு சுகபிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை 4 கிலோ 400 கிராம் எடை இருந்தது. அதிக எடையுடன் கூடியதாக குழந்தை இருந்தபோதிலும், அறுவை சிகிச்சை இல்லாமல் சுகபிரசவம் பார்த்து டாக்டர் மற்றும் செவிலியர்கள் சாதனை படைத்தனர். இதுகுறித்து மகப்பேறு டாக்டர் வித்யாநந்தினி கூறிய தாவது:-

ரத்தினபிரியாவுக்கு முதல் குழந்தை சுகபிரசவ முறையில் பிறந்தது. இதனால் 2-வது குழந்தையும் சுகபிரசவம் ஆகுவதற்கு வாய்ப்பு இருந்தது. இதனால் பொறுமையாக, மிகவும் கவனமாக பிரசவம் பார்த்தோம். அவர் கூட அறுவை சிகிச்சை செய்யுங்கள் வலி தாங்க முடியவில்லை என்றார். ஆனால் நாங்கள் முயற்சி செய்து சுகபிரசவத்தில் அழகான ஆண் குழந்தையை பிறக்க வைத்தோம். அந்த குழந்தை 4 கிலோ 400 கிராம் உள்ளது.பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் இது ஒரு சாதனை ஆகும். ரத்தின பிரியாவுக்கு சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளது. தற்போது மாத்திரைகள் சாப்பிட்டு அந்நோய் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. பொதுவாக சர்க்கரை நோய் மற்றும் ஊட்டச்சத்து கொண்ட உணவுகள் அதிகமாக சாப்பிடுவோருக்கு அதிக எடையுடன் குழந்தைகள் பிறக்கும்.

ரத்தினபிரியாவுக்கு பிறந்த குழந்தையின் தலை எளிதில் வெளியே வந்து விட்டது. ஆனால் அதிக எடையுடன் இருந்ததால் தோள்பட்டை வெளியே வர சிரமமாக இருந்தது. பின்னர் பொறுமையாக குழந்தை முழுவதுமாக வெளியே வர வைத்தோம். ரத்தினபிரியாவுக்கு சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளதால், அந்த குழந்தைக்கு சர்க்கரை நோய் உள்ளதா? என்று பரிசோதனை செய்யப்படும். மேலும் குழந்தைக்கு சத்தான உணவுகள் கொடுக்க வேண்டும். உடற்பயிற்சி செய்ய வைக்க வேண்டும் என்பது போன்ற அறிவுரைகள் வழங்கப்படும்.

இதற்கு முன் பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் 4 கிலோ வரை எடையுள்ள குழந்தைகள் சுகபிரசவத்தில் பிறந்து உள்ளன. ஆனால் அதை விட தற்போது தான் அதிக எடையுடன் முதன்முறையாக குழந்தை பிறந்து உள்ளது. கடந்த மாதம் 4 கிலோ 800 கிராம் எடையுடன் ஒரு குழந்தை அறுவை சிகிச்சை முறையில் பிறந்தது. பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனைத்து வசதிகளும் உள்ளதால் சுக மற்றும் அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் பார்க்க வசதியாக உள்ளது. தனியார் ஆஸ்பத்திரியை விட, அனைத்து வசதிகளும் பச்சிளம் குழந்தைகள் பிரிவில் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story