மானாமதுரை அருகே 100 நாள் வேலை திட்டத்தில் பனைமரங்கள் தீயில் எரிந்து நாசம்
மானாமதுரை அருகே 100 நாள் வேலைத் திட்டத்தின் போது, ஏற்பட்ட தீயால் பனைமரங்கள் எரிந்து நாசமாயின.
மானாமதுரை,
தமிழகம் முழுவதும் 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் கிராமப்புற மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. மானாமதுரை அருகே மல்லல் ஊராட்சியைச் சேர்ந்த பில்லத்தி கிராமத்தில் திரூமூர்த்தி அய்யனார் கோவில் வளாகம் சுத்தம் செய்யும் பணி கடந்த 10 நாட்களாக நடந்து வருகிறது. இதில் 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் கோவிலுக்கு வரும் பாதையில் உள்ள முட்களை வெட்டி அகற்றிவிட்டு அதனை அழிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும் பாதையில் இடையூறாக உள்ள முள்வேலிக்கு தீ வைத்தனர். அப்போது காற்றில் தீ பரவி, அருகில் இருந்த பனை மரங்களில் தீப்பற்றியது. உடனே தீயை அணைக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் காற்றின் வேகம் பலமாக இருந்ததால் சிறிய, பெரிய பனைமரங்கள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமாயின.
100 நாள் திட்ட பணியின் போது, அதை கண்காணிக்க ஊராட்சி செயலாளரோ, களப்பணியாளரோ இல்லை. திட்ட பணியாளர்கள் வந்ததற்கான வருகை பதிவேடும் சம்பந்தப்பட்ட இடத்தில் இல்லை. இவ்வித கவனக்குறைவால் பனைமரங்கள் அழிந்தது குறிப்பிடத்தக்கது. நாடு முழுவதும் பனை மரங்களின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், மேலப்பிடாவூர், புளியங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏராளமான பனை மரங்கள் தீயில் எரிந்து நாசமானது குறிப்பிடத்தக்கது.
எனவே இனி வரும் காலங்களில் மாவட்ட நிர்வாகம் பனை மரங்களை பாதுகாக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர். இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கோ தாயுமானவர் கூறுகையில், 100 நாள் திட்ட பணிகள் நடைபெறுவது தெரியும், மரங்களுக்கு தீ வைத்தது தெரியாது, உடனே சம்பந்தப்பட்ட இடத்தை பார்வையிட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.