தண்டவாளங்கள் அமைக்கும் பணிக்காக ரெயில்வே கேட் அடைக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதி


தண்டவாளங்கள் அமைக்கும் பணிக்காக ரெயில்வே கேட் அடைக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 11 Jan 2019 10:17 PM GMT (Updated: 11 Jan 2019 10:17 PM GMT)

வடமதுரை-காணப்பாடி சாலையில் உள்ள ரெயில்வே கேட்டானது புதிய தண்டவாளங்கள் அமைக்கும் பணிக்காக அடைக்கப்பட்டதால் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் அவதியடைந்தனர்.

வடமதுரை, 

திண்டுக்கல்-திருச்சி இடையே ரெயில்களின் வேகத்தை அதிகரிப்பதால் பழைய தண்டவாளங்கள் அகற்றப்பட்டு புதிய தண்டவாளங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. வடமதுரை-காணப்பாடி சாலையில் உள்ள ரெயில்வே கேட் அருகே நேற்று பணி நடைபெற்றது.

கடந்த சில நாட்களாகவே காலை வேளையில் 1 மணி நேரத்துக்கும் அதிகமாக ரெயில்வே கேட் அடைக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று காலை 8 மணி முதல் 10 மணி வரை சுமார் 2 மணி நேரம் ரெயில்வே கேட் அடைக்கப்பட்டு அந்த இடத்தில் தண்டவாளங்கள் இறக்கி வைக்கும் பணிகள் நடைபெற்றன.

இதனால் அந்த வழியாக சாலை போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. எனவே அந்த வழியாக வந்த வாகனங்கள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டது. காலையில் சுமார் 2 மணிநேரம் ரெயில்வே கேட் அடைக்கப்பட்டதால் பள்ளிக்கு செல்லும் மாணவர்களும், வேலைக்கு செல்லும் பொதுமக்களும் மிகுந்த சிரமம் அடைந்தனர்.

புதிய தண்டவாளங்கள் அமைக்கும் பணிகள் முடியும் வரை போக்குவரத்து அதிகம் உள்ள காலை வேளைகளில் ரெயில்வே கேட்டினை அடைக் காமல் பகல் நேரத்தில் போக்குவரத்துக்கு இடையூறின்றி பணிகளை மேற்கொள்ள பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story