வேடசந்தூர் அருகே சலூன் கடைக்கு தீ வைப்பு


வேடசந்தூர் அருகே சலூன் கடைக்கு தீ வைப்பு
x
தினத்தந்தி 12 Jan 2019 4:30 AM IST (Updated: 12 Jan 2019 3:47 AM IST)
t-max-icont-min-icon

வேடசந்தூர் அருகே மர்ம நபர்கள் தீ வைத்ததில் சலூன் கடை முற்றிலும் எரிந்து நாசமானது.

வேடசந்தூர், 

வேடசந்தூர் அருகே உள்ள எரியோட்டில் சலூன் கடை வைத்திருப்பவர் காளிமுத்து. நேற்று முன்தினம் இரவு இவர் வேலை முடிந்து கடையை மூடிவிட்டு சென்றார். நேற்று அதிகாலையில் திடீரென சலூன் கடை தீப்பிடித்து எரிந்தது.இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அது முடியவில்லை. அதற்குள் கடை முற்றிலும் எரிந்து நாசமானது. கடையில் இருந்த நாற்காலி உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமானது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காளிமுத்து கடை எரிந்து நாசமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து அவர், எரியோடு போலீசில் புகார் செய்தார். அதில் தனது கடைக்கு மர்ம நபர்கள் தீ வைத்து சென்றதாக குறிப்பிட்டுள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, முன்விரோதம் காரணமாக காளிமுத்துவின் கடைக்கு மர்மநபர்கள் தீ வைத்தனரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதே பகுதியில் கடந்த 2 மாதத்துக்கு முன்பு குடிசைக்கு மர்ம நபர்கள் தீ வைத்து சென்றனர். தற்போது சலூன் கடைக்கு தீ வைக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்று அடிக்கடி தீ வைப்பு சம்பவங்கள் நடப்பதால் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story