வட்டி கேட்டு மிரட்டியதால் பெண் விஷம் குடித்து தற்கொலை முயற்சி


வட்டி கேட்டு மிரட்டியதால் பெண் விஷம் குடித்து தற்கொலை முயற்சி
x
தினத்தந்தி 12 Jan 2019 3:57 AM IST (Updated: 12 Jan 2019 3:57 AM IST)
t-max-icont-min-icon

திருப்புவனம் அருகே கடன் தொகையை கட்டிய பிறகும், வட்டி பணம் கேட்டு மிரட்டியதால் பெண் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

திருப்புவனம்,

திருப்புவனம் போலீஸ்சரகத்தை சேர்ந்தது லாடனேந்தல் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 50). இவருடைய மனைவி மாரீஸ்வரி (45). இவர்களுக்கு 2 பெண்கள், ஒரு மகன் உள்ளனர். செந்தில்குமார் லாடனேந்தலில் உள்ள அரசு வங்கியில் நகை மதிப்பீட்டாளராக வேலை செய்து, தற்சமயம் வேறு கிளைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இவர் சில வருடங்களுக்கு முன்பு திருப்புவனம் புதூரை சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவரிடம் ரூ.1½ லட்சம், லாடனேந்தலை சேர்ந்த கீதா, பானுமதி ஆகியோரிடமிருந்து ரூ.ஒரு லட்சம், மதுரையை சேர்ந்து சதீஷ்குமார் என்பவரிடமிருந்து ரூ.1½ லட்சம் என மொத்தம் ரூ.4 லட்சம் கடன் வாங்கி, அதை வட்டியுடன் திருப்பி செலுத்தி விட்டதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் கடன் கொடுத்தவர்கள் சில தினங்களுக்கு முன்பு மீண்டும் வந்து வட்டி பணம் கேட்டு செந்தில்குமாரையும், மாரீஸ்வரியையும் தரக்குறைவாக பேசி, கொலை மிரட்டல் விடுத்தனராம். இதனால் மனமுடைந்த மாரீஸ்வரி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதையடுத்து அவர் மதுரை அரசு ராஜாஜி ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் திருப்புவனம் போலீசார் பன்னீர்செல்வம், கீதா, பானுமதி, சதீஷ்குமார் உள்பட 6 பேர் மீது கந்துவட்டி, கொலைமிரட்டல் உள்ளிட்ட பல பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story