மணல் கடத்தலை தடுக்கச்சென்ற போலீஸ் இன்ஸ்பெக்டரை லாரி ஏற்றி கொல்ல முயற்சி - 3 பேர் கைது


மணல் கடத்தலை தடுக்கச்சென்ற போலீஸ் இன்ஸ்பெக்டரை லாரி ஏற்றி கொல்ல முயற்சி - 3 பேர் கைது
x
தினத்தந்தி 11 Jan 2019 10:45 PM GMT (Updated: 11 Jan 2019 10:33 PM GMT)

மணல் கடத்தலை தடுக்கச்சென்ற போலீஸ் இன்ஸ்பெக்டரை லாரி ஏற்றி கொல்ல முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

விக்கிரவாண்டி,

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள சிறுவள்ளிக்குப்பம் ஆற்றில் இருந்து லாரிகளில் மணல் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் விக்கிரவாண்டி இன்ஸ்பெக்டர் ஜோதி, ஏட்டு ரமேஷ் மற்றும் போலீசார் வெட்டுக்காடு பஸ் நிறுத்தம் அருகில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக மணல் ஏற்றிக்கொண்டு வந்த 2 லாரிகளை சோதனை செய்வதற்காக நிறுத்துமாறு போலீசார் சைகை காண்பித்தனர். அப்போது அதில் வந்தவர்கள் லாரியை நிறுத்தாமல், இன்ஸ்பெக்டர் ஜோதி மீது லாரியை ஏற்றி கொலை செய்ய முயன்றனர். இதில் சுதாரித்துக்கொண்ட அவர் ஒதுங்கிக்கொண்டார். இதனை தொடர்ந்து 2 லாரிகளும் அங்கிருந்து மின்னல் வேகத்தில் சென்றன.

இதையடுத்து போலீசார் தங்களது வாகனங்களில் பின்தொடர்ந்து சென்று, 2 லாரிகளையும் மடக்கினர். உடனே லாரிகளில் இருந்த 2 பேர் தப்பி ஓடிவிட்டனர். 3 பேர் மட்டும் போலீசில் பிடிபட்டனர். இவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அவர்கள், கண்டமங்கலத்தை சேர்ந்த சுரேஷ் (வயது 30), பக்கிரிப்பாளையம் ஜெய்கணேஷ் (24), சின்னகுச்சிப்பாளையம் சிவகுரு (24) ஆகியோர் என்பதும், தப்பி ஓடிய 2 பேர் விழுப்புரம் அருகே மரகதபுரத்தை சேர்ந்த ரமேஷ், சாலைஅகரத்தை சேர்ந்த பாலகுரு என்பதும் தெரியவந்தது. இதையடுத்து சுரேஷ் உள்ளிட்ட 5 பேர் மீதும் கொலை முயற்சி பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் சுரேஷ், ஜெய்கணேஷ், சிவகுரு ஆகியோரை கைது செய்தனர். மற்ற 2 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story